“உரிமைத் தொகை” எனும் உங்கள் உருட்டு இனி எடுபடாது - நயினார் நாகேந்திரன்


“உரிமைத் தொகை” எனும் உங்கள் உருட்டு இனி எடுபடாது - நயினார் நாகேந்திரன்
x

தமிழகத்தையே பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிவிட்டு, விழா எடுக்க மனசாட்சி உறுத்தவில்லையா என நயினார் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகையாக வழங்குவோம் என்று மக்களை ஏமாற்றி, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளாக இத்திட்டத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு, பின்பு தகுதியுள்ள மகளிருக்கு மட்டுமே எனக்கூறி பாதி பேரைப் புறந்தள்ளிவிட்டு, இப்போது மீதமிருக்கும் 17 லட்சம் மகளிருக்கும் உரிமைத்தொகை கொடுக்கிறோம் என்று சொல்கிறீர்களே, எதற்கு இத்தனைக் குளறுபடிகள்? இவ்வளவு பித்தலாட்டங்கள்?

அதிலும் கடந்த மாதம் வரை அரசு உரிமைத்தொகைக்குத் தகுதியற்றவர்களாக இருந்த தமிழக மகளிர், தேர்தல் நெருங்கும் சமயத்தில் மட்டும் தடாலடியாகத் தகுதி உயர்வு பெற்றதன் பின்னணி என்ன? திமுக ஆட்சியில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கால் பெண்களின் வாக்கு வங்கி முழுவதுமாக பாதிக்கப்படும் என்ற பயமா? அல்லது ஆட்சி முடிவதற்குள் இத்திட்டத்தின் மூலமும் கணிசமான பணத்தைக் கமிஷனாக அடித்து விட வேண்டும் என்ற உத்வேகமா?

வலையை விரித்து இரையைப் பிடிப்பது போல, தேர்தல் சமயத்தில் இப்படி பணத்தாசை காட்டி தமிழகப் பெண்களை உங்கள் வாக்கு வங்கியாக மாற்றிவிடலாம் என்று நினைப்பது நியாயமா? கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தையே பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிவிட்டு, “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என விழா எடுக்க மனசாட்சி உறுத்தவில்லையா உங்களுக்கு?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story