கைதி கலெக்டரான வரலாறு


கைதி கலெக்டரான வரலாறு
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதி பற்றி செய்தியை பதிவிட்டிருந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தன்னை சந்தித்து வாழ்த்து பெற்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி லட்சுமிகாந்தன் பாரதியின் படத்தை சமூக வலைத்தள பதிவில்போட்டு, அதோடு ஒரு செய்தியையும் பதிவிட்டிருந்தார். அதில், “நூற்றாண்டு காணும் லட்சுமிகாந்தன் பாரதி விடுதலை போராட்ட வீரர். மொழிப்போர் தீரர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் பேரன். விடுதலை போராட்ட தியாகிகள் கிருஷ்ணசாமி பாரதி-லட்சுமி பாரதி ஆகியோரின் மகன் என நாட்டுக்காக உழைத்த குடும்பத்தின் வழித்தோன்றலாக பிறந்தார். 16 வயது மாணவராக விடுதலை போராட்டத்தில் தொடங்கி மதுரை மாவட்ட கலெக்டர், கலைஞரின் முதல் தனிச்செயலாளர் என பரந்த பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை வாழ்த்தி மகிழ்கிறேன். நாட்டுப்பற்றில் உறுதி, மக்கள் தொண்டில் நாட்டம், எளிமை என நானிலமும் போற்றும் நற்பண்புகளைக்கொண்ட லட்சுமிகாந்தன் பாரதியை இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.

லட்சுமிகாந்தன் பாரதியின் வாழ்க்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னதுபோல இன்றைய தலைமுறைக்கு வாழ்க்கை பாடமாக அமைந்துள்ளது. நூறு ஆண்டை தொட்டுப்பிடிக்கும் அவர் இன்றும் துடிப்பான இளைஞரைப்போல சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வாழும் வாழ்க்கை அனைவரும் பின்பற்றவேண்டியதாகும். தென்காசி பக்கத்தில் உள்ள நயினாரகரம் என்ற ஊரில் பிறந்த லட்சுமிகாந்தன் பாரதி தனது தாய், தந்தை, பெரியம்மா, சகோதரி என்று அனைவரோடும் இணைந்து சிறுவயதிலேயே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிக்கும்போது சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் லட்சுமிகாந்தன் பாரதியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை ஆரப்பாளையம் சிறைச்சாலையில் இருந்து கையில் விலங்கிட்டு சாலையில் நடத்திக் கூட்டிக்கொண்டு வைகையின் வடகரையில் இருந்த கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முன்பு ஆஜர் படுத்தினர்.

தொடர்ந்து அவர் 6 மாதம் அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டார். பல்கலைக்கழகத்தில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டதால் அவர் அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்து படிக்க தடை விதிக்கப்பட்டது. உடனே அவருடைய தந்தை கிருஷ்ணசாமி பாரதி, ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். இதைத்தொடர்ந்து ராஜாஜி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ஏ.எல்.முதலியாருக்கு எழுதிய கடிதத்தில், ‘இளம் வயதுடைய ஒரு மாணவனின் எதிர்காலம் பாழடிக்கப்படக்கூடாது. அவரை தொடர்ந்து படிக்க அனுமதிக்கவேண்டும்’ என்று கோரினார். அதன் அடிப்படையில் லட்சுமிகாந்தன் பாரதி சிறையில் இருந்து விடுதலையானவுடன் படிப்பை தொடர அனுமதி கிடைத்தது. தொடர்ந்து அவர் அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பையும், திருச்சி வளனார் கல்லூரியில் ஹானர்ஸ் படிப்பையும் நிறைவு செய்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டப்படிப்பில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்ற பிறகு அரசு பணியில் சேர்ந்து படிப்படியாக முன்னேறி 1967-ம் ஆண்டு மதுரை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டார். எந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கையில் விலங்கிடப்பட்டு கைதியாக கலெக்டர் முன்பு நிறுத்தப்பட்டாரோ, அதே மாவட்ட கலெக்டர் இருக்கையில் கம்பீரமாக உட்கார்ந்து அலுவல்களை பார்த்ததோடு மட்டுமல்லாமல், மக்கள் எளிதாக கலெக்டரை பார்த்து தங்கள் கோரிக்கைகளை சொல்லக்கூடிய கலெக்டராகவும் திகழ்ந்தார். மதுரையில் மட்டுமல்லாமல் காஞ்சீபுரம், ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களிலும் கலெக்டராக பணியாற்றினார். இப்போது கலெக்டர் அலுவலகங்களில் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் நடக்கும் மனுநீதி நாளின் பிதாமகன் அவர்தான். பல துறைகளின் செயலாளராக மட்டுமல்லாமல் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் தனிச்செயலாளராகவும் பணியாற்றி முத்திரை பதித்த லட்சுமி காந்தன் பாரதியின் உடை மட்டுமல்ல, வாழ்க்கையும் எளிமையானது.

1 More update

Next Story