மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்தியா; மகிழ்ச்சி...தித்திப்பு...கொண்டாட்டம்...

இந்திய மகளிர் அணி 7 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை தோல்வியை சந்திக்க வைத்துள்ளது
ஹர்மன்பிரீத் கவுர் தலைலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகக் கோப்பையை வென்று புதிய உச்சத்தை தொட்டவுடன் அகிலமே மிகவும் தித்திப்பான உணர்வுகளோடு மகிழ்ச்சியால் கொண்டாடியது. 13-வது பெண்கள் உலகக் கோப்பை போட்டி கடந்த செப்டம்பர் 30-ந்தேதி இந்திய மண்ணில் தொடங்கியது. நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த இறுதி ஆட்டத்தில் யார் வெற்றி பெறப்போகிறார்கள்? 2005, 2017-ம் ஆண்டுகளில் நடந்த இறுதி போட்டிகளில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட இந்தியாவா? இப்போது முதன்முறையாக இறுதி போட்டிக்கு வந்திருக்கும் தென்ஆப்பிரிக்காவா? என்று உலகமே வியந்து பார்த்துக்கொண்டிருந்தது. பரபரப்பான ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகள் நெருக்கடியை சாதுர்யமாக கையாண்டு 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 52 ஆண்டுகால கோப்பை ஏக்கத்தை தணித்திருக்கிறார்கள்.
அரைஇறுதியில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் தன்னந்தனியாக போராடி கவனத்தை ஈர்த்தார் என்றால், இறுதி சுற்றில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 21 வயதான அரியானாவை சேர்ந்த ஷபாலி வர்மா 87 ரன் மற்றும் 2 விக்கெட் என வெற்றிக்கு அடிகோலினார். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஷபாலிக்கு முதலில் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. சக வீராங்கனையான பிரதிகா ராவல் காயமடைந்ததால் அவரது இடத்துக்கு ஒருவாரத்துக்கு முன்புதான் அழைக்கப்பட்டார். கூடவே கோப்பையை கையில் ஏந்தும் பொன்னான தருணமும் அவருக்கு கிட்டியிருக்கிறது. கடந்த ஆண்டில் ஆடவர் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்தியாவுக்கு மேலும் ஒரு மணிமகுடமாக தற்போதைய பெண்களின் வெற்றி அமைந்திருக்கிறது. இன்று பெண்கள் கிரிக்கெட்டின் மகத்தான சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம். கொண்டாடுகிறோம்.
இந்திய பெண்கள் அணி உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக மகுடம் சூடியிருந்தாலும், இதற்கான விதை 112 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் விதைக்கப்பட்டது. 1913-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் பிறந்த ஆனி கெல்லிவ் என்ற பள்ளி ஆசிரியை கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள பேக்கர் நினைவு பள்ளிக்கூடத்தில் மாணவிகளுக்கு கிரிக்கெட் விளையாட்டை கட்டாயமாக்கினார். அப்போது அவர் 100 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியை இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தோற்கடிக்கும் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். இந்த போட்டியில் நீல உடையில் நீல பறவைகளாக சிறகடித்து பறந்து விளையாடிய இந்திய அணி வீராங்கனைகளின் ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது.
தென்ஆப்பிரிக்க அணியின் ஆட்டமும் சளைத்ததாக இல்லை. அந்த அணியின் கேப்டனான லாரா வோல்வார்ட் ஆடிய ஆட்டம் ரசிகர்களை வெகுவாக குஷிப்படுத்தியது. அரைஇறுதி போட்டியிலும் சதம் அடித்த கையோடு இறுதி போட்டியிலும் 101 ரன் எடுத்து தனது 11-வது சதத்தை வெற்றிக்கரமாக எட்டினார். உலகக் கோப்பை போட்டியில் இந்திய பெண்கள் அணியில் விளையாடிய வீராங்கனைகளின் அசாத்திய ஆட்டமும், அவர்கள் பெற்ற வெற்றியும் நிச்சயமாக குக்கிராமங்களில் கூட பெண்களை கையில் கிரிக்கெட் மட்டைகளை தூக்கிக் கொண்டு கிரிக்கெட் விளையாட வைப்பதற்கான ஊக்கமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்த நமது பெண்கள் அணியின் வெற்றி சாதாரணமானதல்ல. 7 முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை தோல்வியை சந்திக்க வைத்துள்ளது. ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை அளிக்கும் இந்த வெற்றி உலகையே பாராட்ட வைத்திருக்கிறது.






