நீட் தேர்வு ரத்தா? வரும், ஆனால் வராது...

அரசுப்பள்ளிகளில் படித்த 8 ஆயிரம்பேர் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியிருந்தனர்
அரசு, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவப்படிப்புகளில் சேர அகில இந்திய அளவில் நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) மதிப்பெண் அவசியம். இதேபோல், ராணுவக்கல்லூரியில் பி.எஸ்சி.நர்சிங் படிக்கவேண்டுமென்றாலும், கண்டிப்பாக 'நீட்' தேர்வில் வெற்றிபெறவேண்டும். இத்தகைய நீட் தேர்வு 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நடந்தாலும், அந்த ஆண்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தது. அதன் பின்னர் 2017-ல் இருந்து தமிழ்நாட்டில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு நீட் தேர்வு மூலமாகதான் மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்த ஆண்டு நாடுமுழுவதும் 22,09,318 பேர் எழுதியதில், 7,22,462 மாணவிகள், 5,14,063 மாணவர்கள், 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12,36,531 பேர் தகுதிபெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து 1,35,715 பேர் எழுதியதில், 76,181 பேர்தான் தகுதிபெற்றுள்ளனர். நாடுமுழுவதும் கடந்த ஆண்டு தகுதிபெற்றவர்களைவிட 0.45 சதவீதம் குறைவு என்ற நிலையில், தமிழ்நாட்டில் கடந்த ஆண்டைவிட தேர்ச்சி சதவீதம் 2.34 சதவீதம் குறைந்துவிட்டது. தகுதிபெற்றவர்கள் நாடுமுழுவதும் உள்ள 780 மருத்துவக்கல்லூரிகளில் 1,18,190 மருத்துவப்படிப்பு இடங்களுக்கு போட்டிப்போடவுள்ளனர்.
720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில், கடந்த ஆண்டு முழுமதிப்பெண்களை 67 மாணவர்கள் பெற்றது பெரும் சர்ச்சையானது. இந்த ஆண்டில் முதல் மதிப்பெண் எடுத்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் மகேஷ்குமார் 686 மதிப்பெண்ணே பெற்றார். அடுத்த இடங்களில் மத்தியபிரதேசம், மராட்டிய மாநில மாணவர்கள் முறையே 682, 681 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். வழக்கமாக தரவரிசையில் மாணவிகளே முதலிடத்தில் வரும்நிலையில், இந்த ஆண்டு முதல் 10 தரவரிசைகளில் 5-வது இடத்தில் ஒரு மாணவியை தவிர வேறு யாருமில்லை. அந்த வரிசைகளில் தமிழ்நாட்டில் இருந்தும் யாரும் இடம்பெறவில்லை.
665 மதிப்பெண்ணுடன் அகில இந்திய அளவில் 27-வது இடத்தில் தமிழ்நாட்டின் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சூரிய நாராயணன் உள்ளார். இவர் தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஆவார். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய பெரிய சாதனை எந்த பயிற்சி மையத்திலும் படிக்காததுதான். தானாகவே படித்து தன்னுடைய உழைப்பின் மூலமாகத்தான் இந்த முதலிடத்துக்கு வந்துள்ளார். இதில் மேலும் சிறப்பு என்னவென்றால், மதுரை ஒத்தக்கடை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 2 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். இந்த பள்ளிக்கூடத்தில் இருந்து 4 மாணவிகள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும்வகையில் மதிப்பெண்களை பெற்றிருக்கின்றனர். அரசுப்பள்ளிகளில் படித்த 8 ஆயிரம்பேர் இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தேர்வு முடிவுகளை பார்க்கும்போது பயிற்சி மையத்தில் படித்தால்தான் தேறமுடியும். ஓராண்டுக்குமேல் படிக்கவேண்டும் என்ற கற்பனை வியூகங்களை சில மாணவர்கள் உடைத்தெறிந்திருக்கிறார்கள். ஆசிரியர்களின் கற்பித்தல், மாணவர்களின் கற்றல் மூலமாகவே நீட் தேர்வில் நிச்சயம் வெற்றிகாணமுடியும். 'நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்' என்று அரசியல்வாதிகள் உள்பட பலர் சொன்னாலும், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு அடிப்படையில் நடக்கும் நீட் தேர்வு, அடுத்த சில ஆண்டுகளுக்கு ரத்து என்பதற்கான வாய்ப்பே இல்லை என்பதுதான் எதார்த்தமான உண்மையாகும். எனவே மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு ரத்தாகிவிடுமா?, அடுத்த ஆண்டு ரத்தாகிவிடுமா? என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருக்காமல், நீட் தேர்வு இருக்கத்தான்செய்யும், அதை தாண்டித்தான் தீரவேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு பாளையங்கோட்டை மாணவரை முன்னுதாரணமாக கொண்டு நீட் தேர்வுக்கு படித்து தேர்வெழுதினால் வெற்றிநிச்சயம்.






