மக்களுக்கு ஜாக்பாட் ; மாநில அரசுகளுக்கு என்ன?

வரும் தீபாவளியை மக்களுக்கு இரட்டை தீபாவளியாக்கப் போகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
நாம் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் அமெரிக்காவிற்கு இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை ஏற்படுகிறது. எனவே பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு அனுப்பும் பொருட்களை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதற்காக ஏற்றுமதி நாடுகளாக 100 நாடுகள் கொண்ட பட்டியலை தயாரித்து வைத்திருக்கிறார். மேலும் அவர் உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜி.எஸ்.டி. என்று கூறப்படும் சரக்கு சேவை வரியை குறைக்கும் அறிவிப்பை சுதந்திர தினத்தன்று வெளியிட்டார்.
அப்போது அவர், “வரும் தீபாவளியை மக்களுக்கு இரட்டை தீபாவளியாக்கப் போகிறேன். உங்களுக்காக ஒரு பெரிய பரிசு காத்து இருக்கிறது. அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களை அறிவிக்க இருக்கிறோம். மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களின் விலை குறையும். இதனால் நமது பொருளாதாரத்துக்கும் ஒரு உத்வேகம் கிடைக்கும்” என்றார். இந்த அறிவிப்பு வெளியிடும் முன்பாகவே மத்திய மந்திரிகள் குழு ஜி.எஸ்.டி.யில் என்னென்ன மாறுதல்களை செய்யலாம்? என்ற வரைவு அறிக்கையை தயார்செய்து வழங்கியிருக்கிறது.
அதன்படி ஜி.எஸ்.டி.யில் இப்போது இருக்கும் 0, 5, 12, 18, 28 சதவீத வரி விதிப்பு மற்றும் தங்கத்துக்கு 3 சதவீதம், வைரத்துக்கு 0.25 சதவீதம் என்ற வரிவிதிப்பை மாற்றி இனி 0, 5, 18 என்ற 3 நிலைகளிலும், சிகரெட், புகையிலை பொருட்கள், மதுபானங்கள், ஆடம்பர கார்கள் போன்ற பொருட்களுக்கு 40 சதவீதம் என்ற வரியை அக்டோபர் முதல் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 12 சதவீத வரி விதிப்பில் உள்ள 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரிக்குள் சென்று மக்களுக்கு பெரும் பலனை அளிக்கப்போகிறது. மீதம் உள்ள ஒரு சதவீத பொருட்கள் 18 சதவீத நிலைக்குள் சென்றுவிடும். இப்போது 28 சதவீத வரிக்கு உட்பட்ட பொருட்கள் இனி 18 சதவீத வரிக்குள் அடங்கும். ஆனால் இதில் உள்ள ஆடம்பர கார்கள், புகையிலை பொருட்கள் மட்டும் 40 சதவீத வரிக்குள் சென்றுவிடும். இதுவரை அந்த பொருட்கள் 28 சதவீத வரி மற்றும் மேல்வரி என்ற செஸ் விதிப்புக்கு உட்பட்டு இருந்தன.
இதில் செஸ் வரியில் மாநில அரசுக்கு பங்கு கிடையாது. மத்திய அரசு முழுமையாக எடுத்துக்கொள்கிறது. இனி செஸ் ஒழிக்கப்பட்டு 40 சதவீத வரிவிதிப்புக்கு வரும்போது மாநில அரசுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைக்கும். இந்த வரி சீர்திருத்தத்தால் தீபாவளி முதல் மக்கள் வாங்கும் அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக குறையும். இது நமக்கு எட்டாக்கனி என்று அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் கனவான கார், ஏ.சி. விலை கணிசமாக குறையும். இதுதவிர ஜவுளி, இன்சூரன்ஸ் கட்டணம், மருந்துகள், உரங்கள், வேளாண் கருவிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்று அவர்களின் பயன்பாட்டுக்கான பெரும்பான்மையான பொருட்களின் விலை குறையும். ஆக மக்களுக்கு பலன் தான், ஆனால் மாநில அரசின் வரிவருவாய் குறையுமே! எப்படி அரசு சமாளிக்கும்? என்ற கேள்வி எழுகிறது. விற்பனை உயரும்போது வரி வருமானம் சீராகும். 40 சதவீத வரிவிதிப்பாலும் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது ஒரு கூற்றாக இருக்கிறது. என்றாலும் இழப்புக்கு ஏற்ற வருவாய் மாநில அரசுக்கு கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். அதற்கு மத்திய அரசாங்கம் இழப்பீடு கொடுக்குமா? என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.






