தமிழ் கடவுளுக்கு தமிழில் கும்பாபிஷேகம்


தமிழ் கடவுளுக்கு தமிழில் கும்பாபிஷேகம்
x

கும்பாபிஷேகத்தில் வெற்றி வேல், வீரவேல், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களும் விண்ணைப் பிளக்கும்.

தமிழக மக்கள் அனைவரும் தங்களின் தமிழ் கடவுளாக முருக பெருமானைத்தான் போற்றி வணங்குகிறார்கள். முருகனைப்பற்றி சங்க கால தமிழ் இலக்கியங்களிலேயே குறிப்புகள் இருக்கின்றன. நமக்கு கிடைத்த முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் தான். அது தமிழர்களின் வாழ்வியலையும், தமிழ் மொழியின் சிறப்பையும் உலகத்துக்கே பறை சாற்றுகிறது. அந்த தொல்காப்பியத்திலேயே சேயோன் என்று முருகனை குறிக்கும் பாடல் இருக்கிறது. திருமுருகாற்றுப்படை என்றே முருகனைப்பற்றி நக்கீரன் எழுதியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் பரிபாடல், அகநானூறு, புறநானூறு மற்றும் அவ்வையாரின் பாடல்களிலும் முருகன் போற்றப்படுகிறார்.

திருமுருகாற்றுப்படையில் முருகனின் அறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என்று நக்கீரர் வரிசைப்படுத்தி குறிப்பிட்டு இருக்கிறார். ஒவ்வொரு அறுபடை வீட்டிலும் இருக்கும் முருகனுக்கு தனி தனிச் சிறப்புகள் உண்டு. திருப்பரங்குன்றம் மற்றும் திருச்செந்தூரில் உள்ள முருகனை சுப்பிரமணிய சாமி என்ற பெயரில் பக்தர்கள் வழிபடுகிறார்கள். இந்த அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் கோவிலை தவிர மற்ற அனைத்து கோவில்களும் மலைகள் மேல்தான் இருக்கிறது. ஆனால் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையில் இருக்கிறது. சிறப்புமிக்க கடல் அலைகள் கந்தன் திருவடியில் எப்போதும் தழுவிக்கொண்டு இருக்கும் சிறப்பினால் இந்த திருத்தலம் ''திருச்சீர்அலைவாய்'' என்று அழைக்கப்பட்டது.

குன்றத்திலே குடியிருக்கும் குமரன் என்று பெயர் இருக்கிறதே, பிறகு எப்படி திருச்செந்தூரில் சுப்பிரமணியசாமி கடற்கரையில் குடியிருக்கிறார் என்ற கேள்விக்கும் பதில் இருக்கிறது. அந்த கோவில் கடற்கரையோரம் உள்ள மணற்கேணி பாறையின் மீது அமைந்துள்ளது. அங்கும் அவர் சிறிய பாறை குன்றின் மீது அமர்ந்து தான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருமுருகாற்றுப்படையில், திருப்பரங்குன்றம் கோவில் இருக்கும் மலை பரங்குன்றம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பெரிய மலை என்று இதற்கு பொருள். நாளடைவில் பரங்குன்றம் வார்த்தையில் மரியாதைக்குரிய ''திரு'' சேர்க்கப்பட்டு திருப்பரங்குன்றம் என்று இப்போது அழைக்கப்படுகிறது. முருகன் இங்கு குடவறைக்குள் வாழ்கிறார்.

இந்த இரு படை வீடுகளுக்கும் அடுத்தமாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது. முதலில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஜூலை 7-ந்தேதி நடக்கும் கும்பாபிஷேகம் ரூ.400 கோடி செலவிலான திருப்பணிகளோடு நடக்கிறது. இந்த ரூ.400 கோடியில் ரூ.200 கோடி எச்.சி.எல் நிறுவனம் வழங்கியுள்ளது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கு கும்பாபிஷேகம் நடத்துவது சிறப்பானதாகும். கும்பாபிஷேகம் முடிந்தவுடன் 20 டிரோன்கள் மூலமாக புனித நீர் தெளிக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அடுத்து முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் அடுத்த ஒரு வாரத்தில் அதாவது ஜூலை 14-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இரு கோவில்களின் கும்பாபிஷேகத்துக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் விரிவான ஏற்பாடுகள், வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மிகப்பெரிய பெருமை என்னவென்றால் பொதுவாக கோவில்களில் சமஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் நடக்கும். ஆனால் தமிழ் கடவுளாம் இந்த முருகன் கோவில்களில் சமஸ்கிருதத்தோடு இணைந்து தமிழிலும் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ் கடவுளாம் முருகனுக்கு நடத்தப்படும் இந்த கும்பாபிஷேகத்தில் தமிழ் மணம் மணப்பதோடு வெற்றி வேல், வீரவேல், கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற பக்தி முழக்கங்களும் விண்ணைப் பிளக்கும்.

1 More update

Next Story