தகுதியுள்ள யார் பெயரும் விடுபடக்கூடாது


தகுதியுள்ள யார் பெயரும் விடுபடக்கூடாது
x

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பற்றிய அறிவிப்பு தேர்தல் கமிஷனால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு திருத்தம் 2-வது கட்டமாகும். ஏற்கனவே பீகாரில் நடந்து முடிந்திருக்கிறது. இது புதிதாக நடத்தப்படுவது இல்லை.

சுதந்திரம் பெற்ற பின்னர் 8 முறை நடந்திருக்கிறது. கடைசியாக 2002-2004-ம் ஆண்டுகளில் நடந்தது. இது 9-வது முறையாகும். இப்போது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி நடக்கும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார். தற்போதைய வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டுவிட்டது. அந்த மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்காக 5 லட்சத்து 33 ஆயிரம் பூத் மட்ட அலுவலர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.

இவர்கள் 50 கோடியே 99 லட்சத்து 46 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பட்டியலை சிறப்பு திருத்தம் செய்ய இருக்கிறார்கள். இது இந்தியாவில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேலாகும். அதாவது 51.5 சதவீதமாகும். இந்த 12 மாநிலங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்காளம் ஆகிய 4 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தமிழ்நாட்டில் 6 கோடியே 41 லட்சத்து 15 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காக 68 ஆயிரத்து 467 வாக்குச்சாவடிகள் இருக்கின்றன. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள பூத் மட்ட அலுவலர்கள் நவம்பர் 4-ந்தேதியில் இருந்து டிசம்பர் 4-ந்தேதி வரை வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு படிவத்தை கொடுத்து பூர்த்தி செய்து வாங்குவார்கள்.

ஏற்கனவே 2002-2004-ல் நடந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள் எந்த ஆவணங்களையும் இந்த பட்டியலுக்கு தாக்கல் செய்யவேண்டியதில்லை. அதற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் தங்களது பெற்றோரின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறிப்பிட்டால் போதும். பீகாரை போல எந்த ஆவணமும் தர தேவையில்லை. ஒரு அலுவலர் ஒரு நாளைக்கு 50 கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்துகொடுக்கவேண்டும். அனைத்து பணிகளும் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ந்தேதி வெளியிடப்படுகிறது.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிக்கு ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விவாதிக்க நவம்பர் 2-ந்தேதி அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியிருக்கிறார். வாக்காளர் பட்டியல் சீரமைக்கவேண்டும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் அதை அவசரமாக செய்யக்கூடாது. ஏப்ரல் மாதம் தேர்தலை வைத்துக்கொண்டு இப்போது இதை அவசரமாக செய்ய தொடங்குவது சரியானதல்ல. எனவே இதை எதிர்க்கிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதும் சரியான கருத்துதான். ஜனநாயகத்துக்கு மிகவும் துல்லியமான மேம்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் என்பது அவசியமானதாகும். அதாவது தகுதியுள்ள யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல், தகுதியில்லாத யாரும் சேர்க்கப்படாமல் ஒரு சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதையே லட்சியமாகக் கொண்டு இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி நடைபெறவேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலுக்கும், வாக்காளர் பட்டியலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கக்கூடாது.

1 More update

Next Story