வியக்கத்தகு வேகமான வளர்ச்சி

இந்தியாவின் வளர்ச்சி, அனைத்து கணிப்புகளையும் மீறிய அபார வளர்ச்சியாகும்.
வாகனங்கள் சீறிப்பாயும் வேகத்தை ஸ்பீடாமீட்டரில் பார்த்துதான், எவ்வளவு நேரத்தில் போகவேண்டிய இடத்தை அடையமுடியும் என்று கணிப்பதுபோல நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி எவ்வளவு என்பதை ஜி.டி.பி. அதாவது பொருளாதார வளர்ச்சியை வைத்துதான் அளவிடமுடியும். அத்தகைய பொருளாதார வளர்ச்சியை காலாண்டுகளுக்கு ஒருமுறை என்று ஒரு ஆண்டில் 4 முறை மத்திய புள்ளியியல் துறை மதிப்பிட்டு வெளியிடுகிறது. மத்திய அரசாங்க பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள், சர்வதேச அளவில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியா மீது விதித்த 50 சதவீத வரி ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஏனெனில் இவையெல்லாம் அரசாங்கம், தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியா 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இப்போது ரூபாய் மதிப்பில் ரூ.446.75 லட்சம் கோடி என்ற அளவு பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். அதற்கு ஆண்டுக்கு 12 சதவீதம் வளர்ச்சி இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்து உள்ளனர். அதனை அடைய முடியும் என்ற நம்பிக்கை இப்போது வந்து இருக்கிறது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அதாவது கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருந்தது.
2-வது காலாண்டில் அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால் இப்போது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இந்த காலக்கட்டத்தில் 11.19 சதவீதமாக முதல் இடத்தில் இருக்கிறது. எனவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு ஏற்றிவிடும் ஏணி போல முக்கிய பங்காற்றுகிறது. சீனா கூட 4.8 சதவீத வளர்ச்சி தான் பெற்று இருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி, அனைத்து கணிப்புகளையும் மீறிய அபார வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 5.6 சதவீத வளர்ச்சிதான் இருந்தது. இப்போதைய 8.2 சதவீதம் என்ற அதிவேக வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிப்பது உற்பத்தி துறை தான். இந்த துறை மட்டும் 9.1 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு தான் மிக அதிகம்.
மேலும் வீட்டு நுகர்வு, பொருளாதாரத்தில் 60 சதவீதம் அளவிற்கு உள்ளது. குறிப்பாக கிராமப்புறங்களில் விவசாய உற்பத்தி மேம்பட்ட காரணத்தால் செலவினம் உயர்ந்து இருக்கிறது. வருமான வரி குறைப்பும், தனிநபரின் கையில் பணப்புழக்கத்தை தாராளமயமாக்கியிருக்கிறது. 2025-2026-ம் ஆண்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருந்த ரிசர்வ் வங்கி, இப்போது இந்த காலாண்டில் ஏற்பட்ட வளர்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த ஆண்டு வளர்ச்சி 7 சதவீதத்தை தாண்டிவிடும் என்று மதிப்பிட்டுள்ளது. இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் வி.அனந்த நாகேசுவரன் இந்த வளர்ச்சிகளையெல்லாம் பார்த்தால், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி 4 டிரில்லியன் அமெரிக்க டாலர், அதாவது ரூ.357.40 லட்சம் கோடியை எட்டி பிடித்துவிடும் என்று சொன்னது, பிரதமர் மோடி கூறியதுபோல ஒவ்வொரு இந்தியனும் உற்சாகத்தில் திளைக்கும் வகையில் அமைந்துள்ளது.






