இந்தியாவுக்குள் நுழைந்த டெஸ்லா கார்


இந்தியாவுக்குள் நுழைந்த டெஸ்லா கார்
x

4,500 சதுர மீட்டர் அளவிலான டெஸ்லா காரின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கார் என்பது ஆடம்பரமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது வங்கிகளில் குறைந்த வட்டிக்கு வாகன கடன் கிடைப்பதால் நடுத்தர மக்களும் அதிக அளவில் கார்களை வாங்கி பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதுபோல மேலும் பல காரணங்களால் இப்போது கார் விற்பனை மிகவும் அதிகரித்துக்கொண்டுபோகிறது. அதிலும் குறிப்பாக மின்சார கார்களின் பயன்பாடும் மக்களிடம் பெருகிவிட்டது. புதிதாக கார் வாங்குபவர்களின் முதல் தேர்வு மின்சார காராகத்தான் இருக்கிறது.

எனவே அனைத்து கார் நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தியை தொடங்கிவிட்டன. ஆங்காங்கு அதற்காக சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், டெஸ்லா கார்களை தயாரிக்கும் தன்னுடைய நிறுவனத்தை இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டார். தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் டெஸ்லா கார் நிறுவனத்தை தங்களது மாநிலத்தில் தொடங்க முயற்சி செய்தன. ஆனால் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக வந்த பிறகும், டெஸ்லா நிறுவனத்தின் கார்களுக்கு இந்தியாவில் கேட்ட பல வரி சலுகைகளுக்கு பிறகும் டெஸ்லா நிறுவனம் தன் நிலைப்பாட்டை மாற்றி முதலில் சீனா போன்ற நாடுகளில் தயாரித்துள்ள மின்சார கார்களை இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் அளவில் மும்பையிலும், டெல்லியிலும் ஷோரூம்கள் தொடங்கப்படும் என்று அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக 4,500 சதுர மீட்டர் அளவிலான டெஸ்லா காரின் முதல் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஷோரூமில் டெஸ்லா மின்சார வகை 'ஒய்' என்ற பெயரில் 2 மாடல் கார்கள் சிவப்பு, முத்து வெள்ளை உள்பட 6 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் முதல் மாடல் கார் விலை ரூ.59 லட்சத்து 89 ஆயிரமாகும். இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும். ரூ.67 லட்சத்து 89 ஆயிரம் விலையுள்ள மற்றொரு மாடல் கார் 622 கிலோ மீட்டர் தூரம் செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தானியங்கி முறையில் அந்த கார்கள் இயங்கவேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக ரூ.6 லட்சம் செலுத்தவேண்டும். இப்போதைக்கு இந்த கார்களை வாங்குபவர்கள் டெல்லி, மும்பை, குர்கான் ஆகிய நகரங்களில் மட்டுமே பதிவு செய்யமுடியும்.

இந்த டெஸ்லா கார்கள் மெர்சிடஸ் பென்ஸ், பி.எம்.டபிள்யூ., மஹிந்திரா போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த கார் 100 சதவீத இறக்குமதி வரிக்கு உள்ளாகுவதால்தான் இவ்வளவு அதிக விலையில் இருக்கிறது. ஆனால் இவ்வளவு வரியில்லாததால் அமெரிக்காவிலும், சீனாவிலும் இந்த காரின் விலை ரூ.34 லட்சத்துக்கும் குறைவாகவே இருக்கிறது. எனவே இத்தகைய கார்களுக்கு இறக்குமதி வரியை குறைத்தால் டெஸ்லா கார் நடுத்தர மக்களும் வாங்குவதற்கேற்ற வகையில் விலை குறைந்துவிடும். இதுமட்டுமல்லாமல் டெஸ்லா கார் நிறுவனம் ஏற்கனவே திட்டமிட்டப்படி இந்தியாவில் தன்னுடைய தொழிற்சாலையை நிறுவி உற்பத்தியை தொடங்கினால் நிச்சயமாக இந்த காரின் விலை குறையும். தூத்துக்குடியில் அடுத்த மாதம் வின்பாஸ்ட் நிறுவனம் தனது உற்பத்தியை தொடங்கும் நிலையிலும், டெஸ்லா காரின் வருகையாலும் கார் வாங்க நினைப்பவர்களுக்கு தேர்வாக பல மாடல் கார்கள் வலம் வர இருக்கின்றன.

1 More update

Next Story