ஆட்சியை தீர்மானிப்பது பெண்களும் இளைஞர்களும்தான்

இளைஞர்கள், பெண்கள் தேர்ந்தெடுக்கும் துடிப்பான அரசுதான் தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப்போகிறது.
உலகிலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். மத்தியிலும் சரி, மாநிலங்களிலும் சரி அரசை நடத்துபவர்களை மக்களே தேர்ந்தெடுப்பதுதான் நமது ஜனநாயகத்தின் பலமாகும். தேர்தல் மூலமே இது சாத்தியமாகிறது. இந்தியாவில் நடக்கும் தேர்தல் திருவிழா உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல்களில் யார் யார் வாக்களிக்கலாம்? என்பதை நிர்ணயம் செய்வதற்காக ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 18 வயது பூர்த்தியானவர்களை கொண்டு ஆண்டுக்கு 4 முறை அதாவது ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர்.
அதன்பின்னர், அக்டோபர் மாதம் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வழக்கப்படி வாக்காளர் பட்டியல் தேசிய அளவிலும், மாநில அளவிலும் வெளியிடப்பட்டது. உலகிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட இந்தியாவில் இப்போது வாக்காளர்கள் எண்ணிக்கை 99 கோடியை தாண்டிவிட்டது. கடந்த ஆண்டு 96.9 கோடி வாக்காளர்கள்தான் இருந்தனர். இதில் 50.7 கோடி பேர் ஆண் வாக்காளர்கள். 49.3 கோடி பெண் வாக்காளர்கள். இந்தியாவுக்கு அடுத்து 27 நாடுகளைக்கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 40 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 24 கோடியே 47 லட்சம்தான். ஒட்டுமொத்த இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் முதல் இடத்திலும், மராட்டியம் 2-வது இடத்திலும், பீகார் 3-வது இடத்திலும், மேற்குவங்காளம் 4-வது இடத்திலும் இருக்கிறது. அடுத்து தமிழ்நாட்டில் 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
தேசிய அளவில் ஆண் வாக்காளர்கள் அதிகம் என்றாலும் தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம். ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 74 ஆயிரத்து 27 ஆக உள்ளது. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 803 ஆக இருக்கிறது. ஆண் வாக்காளர்களைவிட 12 லட்சத்து 55 ஆயிரத்து 776 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதுபோல இந்த ஆண்டு 18 வயது பூர்த்தியாகி புதிதாக 10 லட்சத்து 61 ஆயிரத்து 556 பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்து வாக்காளர் பட்டியலில் அதிகப்படியாக இருப்பவர்கள் இளைஞர்கள்தான். 18 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 39.31 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அதுபோல 40 வயது முதல் 59 வயது வரையிலான நடுத்தர வயதுள்ளவர்கள் 39.45 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.
பெண்களை மட்டும் தனியாக எடுத்துக்கொண்டால் 50.98 சதவீதம் பேர் இருக்கிறார்கள். இப்போதுள்ள வாக்காளர் பட்டியல்படி தேர்தல் நடக்காது என்றாலும், அடுத்த ஆண்டு தயாரிக்கப்படும் வாக்காளர் பட்டியலிலும் புதிதாக சேர்க்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கையைத்தவிர, வேறு பெரிய மாற்றம் இருக்காது. ஆக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பெண்களும், இளைய சமுதாயத்தினரும் யாருக்கு வாக்களிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்துத்தான் எந்த கட்சி ஆட்சிக்கும் வரும் என்ற நிலை இருக்கிறது. அதை நன்குபுரிந்துகொண்ட அரசியல் கட்சிகள் அவர்களின் வாக்குகளை கவருவதற்காக இப்போதே தங்கள் பணிகளை தொடங்கிவிட்டனர். மொத்தத்தில் இளைஞர்கள், பெண்கள் தேர்ந்தெடுக்கும் துடிப்பான அரசுதான் தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சி அமைக்கப்போகிறது






