தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு


தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
x

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்

சென்னை,

கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 13-ந்தேதி வரையிலான 6 நாட்கள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்று முதல் 11-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பார்வூட்டில் (நீலகிரி) 7 செ.மீ., சிறுவாணி, தானியமங்கலம், நல்லதங்கால் நீர்தேக்கத்தில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.


Next Story