தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.
சென்னை,
சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (நேற்று) காலை 8.30 மணிக்கு அதேபகுதியில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணிநேரத்தில் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மியான்மர்-வங்காளதேசம் கடற்கரையை ஒட்டி நகரக்கூடும். அதேபோல் வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது.
வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. தென்தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவியது. தமிழகத்தில் இன்று (செவ்வாய்கிழமை) ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (புதன்கிழமை) வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகளிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன், கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் மத்திய கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், வடகிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மற்றப்படி, வங்ககடல் மற்றும் அரபிக்கடலில் மீனவர்களுக்கான எச்சரிக்கை வருகிற 7-ந்தேதி வரை எதுவுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






