சென்னை, திருவள்ளூரில் அதி கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது வானிலை மையம்

சென்னை திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சென்னை,
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி சென்னை அருகே கடல் பகுதியில் 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது .இதனால், சென்னையில் இன்று காலை முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது.
ஆனால் இன்று காலை 7 மணிக்கு பிறகு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து கனமழையாக வெளுத்து வாங்கியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த 2 மாவட்டங்களிலும் விடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் மிதக்கிறது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூரில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூருக்கு முன்னதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது ரெட் அலர்ட் எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 3 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.






