

சென்னை,
இலங்கையில் கோரத்தாண்டவம் ஆடி பெரும் சீரழிவை ஏற்படுத்திய டிட்வா' புயலால் சென்னைக்கும் ஆபத்து நேரிடுமோ? என்ற கவலையும், பீதியும் மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் சென்னை மீது கருணை காட்டும் விதமாக கனமழைக்கான மேகக்கூட்டங்கள் புயலை விட்டு விலகி சென்றன. இந்தநிலையில், டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரைகளில் நிலவிய டிட்வா புயல் வலுவிழந்தது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழுந்தது. சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. புதுச்சேரி கிழக்கு தென்கிழக்கு 90 கி.மீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது.
வடக்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்ககூடும். தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களுக்கு இன்று கொடுக்கப்பட்ட ரெட் அலர்ட் திரும்பப் பெறப்பட்டு, கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை பகுதிகளில் மதிய வேளைக்கு பின்னர் தரைக்காற்று பலமாக வீசியது. பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் புழுதி காற்று வீசியது. இதனால் கடற்கரைக்கு வந்திருந்தவர்கள் உடல் மணல் அபிஷேகம் செய்தது போன்று ஆனது. புழுதி காற்றால் கடற்கரை மணற்பரப்பில் இருந்த மணல் பட்டினப்பாக்கம் சர்வீஸ் சாலையில் சில இடங்களை போர்வை போன்று மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி செல்லும் சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 'பொக்லைன்' எந்திரம் மூலம் மணல் குவியலை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். புயல் கனமழையை கொடுக்காமல் வலுவிழந்ததால் சென்னைக்கான ஆபத்து நீங்கியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்தனர்.