5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம்

மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.
நேற்று (24-09-2025) காலை வடக்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் - மேற்கு வங்க பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மாலை 1730 மணி அளவில் வலுகுறைந்தது. இருப்பினும், இன்று (25-09-2025), வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக வடமேற்கு, அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் நிலவுகிறது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நேற்று (24-09-2025) மத்திய மியான்மார் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (25-09-2025) காலை மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு திசையில் நகர்ந்து, 26-ஆம் தேதி வாக்கில், தெற்கு ஒரிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வருகின்ற 27-ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும்.
25-09-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
27-09-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
28-09-2025 முதல் 01-10-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று (25-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (26-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது .






