5 நாள் பயணம்: ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார் டிரம்ப்


5 நாள் பயணம்: ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திக்கிறார் டிரம்ப்
x

சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக 2-வது முறையாக டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு வருகை தந்துள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணமாகும். மலேசியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ள ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் தலைநகர் கோலாலம்பூருக்கு வந்தார்.

அவருக்கு மலேசியா அரசு தரப்பில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆசியன் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். முன்னதாக கம்போடியா-தாய்லாந்து இடையேயான எல்லை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமைதி ஒப்பந்தத்தில் டிரம்ப் கையெழுத்திடுகிறார். பின்னர் அங்கிருந்து ஜப்பானுக்கு செல்கிறார். அங்கு புதிய பிரதமர் சனே தகச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொடர்ந்து தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசியா பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

அப்போது சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தநிலையில் வடகொரிய அதிபருடனான சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு டிரம்ப், “கிம் ஜாங் அன் எனக்கு நல்ல நண்பர். அவரை சந்திக்க மிகவும் ஆவலாக உள்ளேன். வாய்ப்பிருந்தால் பார்க்கலாம்” என்றார். இருப்பினும் பயணத்திட்டத்தில் கிம் ஜாங் அன்னுடனான எந்த சந்திப்புக்கும் திட்டமிடப்படவில்லை என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story