அபுதாபி லாட்டரி குலுக்கல்: சென்னை என்ஜினீயருக்கு ரூ.60¼ கோடி பரிசு


அபுதாபி லாட்டரி குலுக்கல்: சென்னை என்ஜினீயருக்கு ரூ.60¼ கோடி பரிசு
x

representation image (Meta AI)

தினத்தந்தி 5 Nov 2025 6:41 AM IST (Updated: 5 Nov 2025 2:33 PM IST)
t-max-icont-min-icon

இது 280-வது லாட்டரி குலுக்கல் ஆகும்.

அபுதாபி,

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் லாட்டரி குலுக்கல் ஒவ்வொரு மாதமும் நடந்து வருகிறது. இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை 500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் 12,080 ரூபாய்) ஆகும். இதனை பொதுமக்கள் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள கடைகளிலும், இணையதளம் மூலமும் வாங்கிக் கொள்ளலாம்.

அதிகமான பரிசுத்தொகை வழங்கப்படுவதால் அமீரகத்தில் வசிப்பவர்கள் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளில் வசிப்பவர்களும், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிப்பவர்களும் இதனை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த லாட்டரி குலுக்கலில் அமீரகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயராக பணிபுரிந்து வரும் சென்னையைச் சேர்ந்த சரவணன் வெங்கடாசலம் (வயது 44) என்பவர் 2½ கோடி திர்ஹாம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.60.37 கோடி) அதிர்ஷ்ட பரிசை பெற தேர்வு செய்யப்பட்டார். இது 280-வது லாட்டரி குலுக்கல் ஆகும்.

இது குறித்து சரவணன் வெங்கடாசலம் கூறியதாவது:- இந்த அதிர்ஷ்ட பரிசு கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. எனது பெயரில் பலர் இருக்கலாம் என நினைத்தேன். எனக்கு பரிசு கிடைத்ததை உறுதி செய்த பின்னரே லாட்டரி நிறுவனத்துடன் பேசினேன். இந்த பரிசை கொண்டு எனது 2 குழந்தைகளின் கல்விக்காக செலவிடுவேன். கடந்த 2019-ம் ஆண்டு அமீரகத்துக்கு வந்தேன். அதற்கு முன்னர் கத்தார், குவைத் மற்றும் ஓமன் நாடுகளில் பணிபுரிந்தேன். கடந்த மாதம் 30-ந் தேதி ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் என்ற சிறப்பு திட்டத்தின் மூலம் எனது அதிர்ஷ்ட எண்ணான 463221-ஐ வாங்கினேன். இது எனது வாழ்க்கையில் கிடைத்த முதல் அதிர்ஷ்ட பரிசு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

1 More update

Next Story