இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு

இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும்.
நியூயார்க்,
அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ந்தேதி பொறுப்பேற்று கொண்ட டொனால்டு டிரம்ப், பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, நாடுகளுக்கு வரி விதிப்பதும் அடங்கும்.
வரி வருவாயை கொண்டு நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது போல் இருந்தபோதும், அதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி டிரம்ப் உத்தரவிட்டார்.
பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவிலும், சமீபத்தில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதேபோன்று, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பு மற்றும் கூடுதல் அபராதம் ஆகியவற்றை விதித்து டிரம்ப் உத்தரவிட்டார்.
அது ஆகஸ்டு 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது என முதலில் தெரிவிக்கப்பட்டது. இது பின்னர் 7-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ரஷியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய்யை வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதற்கு பல காரணங்களையும் கூறி வருகிறது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு உதவும் வகையில் இந்தியா செயல்படுகிறது என்றும் குறைந்த விலைக்கு எண்ணெய்யை இந்தியா வாங்கி, பிற நாடுகளிடம் அதிக விலைக்கு விற்கிறது என்றும் குற்றச்சாட்டுகளை டிரம்ப் சுமத்தியுள்ளார்.
ஆனால், ரஷியாவிடம் இருந்து உரம், யுரேனியம் போன்ற பொருட்களை அமெரிக்கா இறக்குமதி செய்வது பற்றி இந்தியா இன்று கேள்வி எழுப்பியது. அதற்கு டிரம்ப் மழுப்பலான பதில் கூறினார். அமெரிக்க ஜனாதிபதியாக இருக்கும் டிரம்ப், இந்த விசயம் தனது கவனத்திற்கு வரவில்லை. அதுபற்றி நான் ஆய்வு செய்வேன் என கூறினார்.
இந்நிலையில் இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது என டிரம்ப் இன்று அறிவித்து உள்ளார். இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட வேண்டும் என டிரம்ப் காலக்கெடு விதித்திருந்த நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருந்து பொருட்களுக்கான வரி விதிப்புகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ள நிலையில், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் வர்த்தகத்தில் பெருமளவில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சி.என்.பி.சி. செய்தி சேனலுக்கு நேற்று அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது, இந்தியா அதிக வரி விதிக்கும் நாடாக உள்ளது. நம் மீது, வேறு யாரையும் விட மிக அதிக வரியை இந்தியா விதிக்கிறது. அவர்களுடைய வரி அதிகம் என்பதனால், நாம் மிக மிக சிறிய அளவிலேயே அவர்களுடன் வர்த்தகம் செய்கிறோம்.
ஒரு நல்ல வர்த்தக உறவுக்கான நாடாக இந்தியா இருக்கவில்லை. அதனால், நாம் அவர்களுக்கு 25 சதவீத வரி விதித்திருக்கிறோம். அவர்கள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்குகிறார்கள். இதனால், அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியா மீது பெரிய அளவில் வரி விதிக்கலாம் என நான் நினைக்கிறேன் என டிரம்ப் கூறிய நிலையில் இந்த வரி விதிப்பு அறிவிப்பு வெளிவந்து உள்ளது.






