அமெரிக்கா நம்பத்தகுந்த நாடு இல்லை: ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கருத்து

இந்தியா மீதான அதிகபட்ச வரிவிதிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார்.
சிகாகோ,
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னரும், பொருளாதார மேதையும் ஆனவர் ரகுராம் ராஜன். 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பொருளாதார கல்லூரிகளில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
மேலும் தமிழ்நாட்டின் பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் உறுப்பினராக உள்ள அவர், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களை அமல்படுத்த காரணமாக இருந்தார்.
இந்தநிலையில் சிகாகோ கவுன்சில் நடத்திய உலக விவகாரங்களுக்கான மாநாட்டில் ரகுராம் ராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “20 ஆண்டுகளாக இந்தியாவும், பாகிஸ்தானும் நட்பு நாடுகளாக உள்ளது. இந்தச்சூழலில் இந்தியா மீதான அதிகபட்ச வரிவிதிப்பு ஏமாற்றம் அளிக்கிறது. நான் அரசியல் தலைவர்களை குறித்து பேசவில்லை. வரிவிதிப்பால் பாதிக்கப்படும் சாமானியர்கள் குறித்து கவலை தெரிவிக்கிறேன்.
எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றவில்லை. பாகிஸ்தானுக்கு 19 சதவீதம் வரி, நமக்கு 50 சதவீதம் வரியா?. அமெரிக்கா நம்பத்தகுந்த நாடு இல்லை. டிரம்ப் உடனான பிரதமர் மோடியின் நட்பு இவ்வளவுதானா? இது அவருடைய ஆட்சிக்கு பேரிடி” என்றார்.






