விண்வெளியில் திடீரென வெடித்த அப்பல்லோ 13 விண்கலம்; திக் திக் நிமிடங்கள்... ஜிம் லவெல் குழு உயிர் தப்பியது எப்படி?

அவர்கள் 4 நாட்கள் போராடி ஏப்ரல் 17-ந்தேதி பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக வந்து விழுந்தனர்.
நியூயார்க்,
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நாசா விண்வெளி வீரர்களில் குறிப்பிடத்தக்கவர் ஸ்மிலின் ஜிம் லவெல்.
ஜெமினி 7, ஜெமினி 12, அப்பல்லோ 8 மற்றும் அப்பல்லோ 13 என மொத்தம் நான்கு குறிப்பிடத்தக்க விண்வெளி பயண திட்டங்களில் பங்காற்றி, இந்த சகாப்தத்தின் அதிக அனுபவம் வாய்ந்த, மதிப்புமிக்க விண்வெளி வீரராக அறியப்படுகிறார்.
இவருடைய தலைமையிலான குழு அப்பல்லோ 13 திட்டத்தின் கீழ் விண்வெளி பயணம் மேற்கொண்டது. அப்போது லவெல், ஒரு நெருக்கடியான தருணத்தில், அமைதியான முறையில் செயல்பட்டு, தலைமையேற்ற பொறுப்பை திட்டமிடலுடன் நடத்தி முடித்து வெற்றி கண்டார்.
அவருடைய திறமைக்கு ஒரு சோதனையாக அப்பல்லோ 13 திட்டம் அமைந்தது. அந்த குழுவுக்கு தலைமையேற்று வழிநடத்தி சென்ற அவர், அமைதியாக, அதேநேரத்தில் விரைவாக சிந்தித்து செயல்பட்டார். 1970-ம் ஆண்டு ஏப்ரல் 11-ந்தேதி அப்பல்லோ 13 விண்கலத்தின் பயணம் தொடங்கியது. ஏறக்குறைய 56 மணிநேரம் பயணத்திற்கு பின்னர், அந்த நிகழ்வு நடந்தது.
நிலவுக்கான பயணத்தின் வழியில், விண்வெளியில் திடீரென, விண்கலத்தில் இருந்த ஆக்சிஜன் விநியோகிக்கும் தொட்டி வெடித்தது. இதனால், ஆக்சிஜன் மற்றும் மின் சக்தி கிடைப்பது தடைபட்டது. அப்போது ஜிம் லவெல் உடன் பயணித்த, சக வீரர்களான ஜான் ஸ்விகெர்ட் ஜூனியர் மற்றும் பிரெட் ஹெய்ஸ் ஜூனியர் ஆகியோர் உயிருடன் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
அவர்களுடைய நிலவில் தரையிறங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டிய சூழலும் ஏற்பட்டது. விண்வெளி வீரர்கள் உயிர் தப்பி பூமிக்கு திரும்புவதிலேயே முழு கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது, அகுவேரியஸ் என்ற கலத்தின் உதவியுடன் அவர்கள் பூமிக்கு திரும்பினர்.
அவர்களின் உயிர் காக்கும் படகாக அது செயல்பட்டது. உயிர்பாதுகாப்புக்கான திரவங்களை மேம்படுத்தியும், இயந்திர உதவியின்றி மனிதர்களின் உதவியை கொண்டும், தீவிர குளிரான சூழலில் போராடியும் 4 நாட்கள் பயணித்து அவர்கள், ஏப்ரல் 17-ந்தேதி பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக வந்து விழுந்தனர்.
இதன்பின்னர், விண்வெளி பயண திட்டத்தில் இருந்து விலகி, ஜிம் லவெல், வர்த்தகம் செய்ய சென்றார். 1973-ம் ஆண்டில் நாசா மற்றும் கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற அவர், சி.இ.ஓ. மற்றும் தலைமை செயல் அதிகாரி போன்ற பதவிகளை வகித்து வந்திருக்கிறார். பின்னாளில் அப்பல்லோ 13 திரைப்படம் டாம் ஹாங்ஸ் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது.
இதற்கு முன்பு, 1968-ம் ஆண்டு விண்வெளி பயணம் மேற்கொண்ட அப்பல்லோ 8 விண்கல பயணத்தில், ஜிம் தலைமையில் நாசா வீரர்கள் பிராங்க் போர்மன் 2 மற்றும் வில்லியம் ஆண்டர்ஸ் ஆகியோர் சென்றனர்.
புவியின் ஈர்ப்பு விசையை கடந்து, மனிதர்கள் முதன்முறையாக விண்வெளிக்கு மேற்கொண்ட பயணம் என்ற வகையில் அது வரலாறு படைத்தது. வீரர்கள் பூமிக்கு திரும்புவதற்கு முன் 10 முறை நிலவை அவர்கள் சுற்றி, சுற்றி வந்தனர். இந்த பயணத்தில், உயிருடன் இருந்த கடைசி நபராக லவெல் அறியப்பட்டார்.
இந்நிலையில், நாசாவின் மூத்த விண்வெளி வீரரான அவர், அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியில் வீட்டில் இருந்தபோது, அவருடைய 97-வது வயதில் காலமானார். இதனை நாசா நிர்வாகி மற்றும் போக்குவரத்து செயலாளரான சீன் டப்பி உறுதி செய்துள்ளார்.
நாசாவின், நிலவில் தரையிறங்கும் 3-வது திட்டம் விண்வெளி வரலாற்றில் தோல்வியை தழுவிய போதும், பெரிய விபத்து ஏற்படுவதில் இருந்து லவெல் குழுவினர் உயிர் தப்பியது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.






