ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி; சீனா வரவேற்பு


ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்  பங்கேற்கும் பிரதமர் மோடி;  சீனா வரவேற்பு
x

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதை சீனா வரவேற்றுள்ளது.

புதுடெல்லி,

சீனாவின் தியான்ஜின் நகரில் வரும் 31-ந் தேதி, செப்டம்பர் 1-ந் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோடி கடைசியாக 2018-ம் ஆண்டு சீனா சென்றார்.

இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். வரும் 29-ந் தேதி தேதி ஜப்பான் புறப்படும் பிரதமர் மோடி அங்கு பயணத்தை முடித்த பிறகு அங்கிருந்து சீனா செல்ல இருக்கிறார். இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில், “தியான்ஜின் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் மோடியை சீனா வரவேற்கிறது. அனைத்து தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியுடன் தியான்ஜின் உச்சி மாநாடு ஒற்றுமை, நட்பு மற்றும் பலனளிக்கும் முடிவுகளின் கூட்டமாக இருக்கும். மாநாட்டில் அனைத்து உறுப்பு நாடுகளும் 10 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதில் இருந்து நடத்தப்பட்ட மாநாடுகளில் தியான்ஜின் உச்சி மாநாடு மிகப்பெரிய அளவிலான மாநாடாக இருக்கும்” என்றார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு செல்வாக்கு மிக்க பொருளாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பாகும்.

1 More update

Next Story