2 நாளாக இருமல்... அமெரிக்காவில் கல்லூரி மாணவி திடீர் மரணம்; தோழிகள் அதிர்ச்சி

அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள குடியிருப்பில் அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.
நியூயார்க்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் ராஜலட்சுமி யார்லகட்டா என்ற ராஜி (வயது 23). சமீபத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த இவர், படிப்புக்கு பின்னர், அமெரிக்காவில் வேலை தேடி கொண்டு இருந்துள்ளார்.
இந்நிலையில், 2 நாட்களாக அவருக்கு தொடர்ந்து இருமல் இருந்துள்ளது. கடுமையான இருமலுடன், நெஞ்சு வலியும் சேர்ந்து அவரை பாதித்துள்ளது. இந்நிலையில், டெக்சாஸில் உள்ள அவருடைய குடியிருப்பில் அவர் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார். அலாரம் அடித்தும் அவர் எழுந்திருக்கவில்லை.
அவர் தூக்கத்திலேயே உயிரிழந்து இருக்கிறார். இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர் மற்றும் தோழிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், உயிரிழப்புக்கான காரணம் என்னவென்று பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும்.
அவருடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக நிதி திரட்டும் பணியில் அவருடைய உறவினரான சைதன்யா ஈடுபட்டு உள்ளார். ஆந்திர பிரதேசத்தின் பபட்லா மாவட்டத்தில் கார்மிசெடு கிராமத்தில் அவருடைய பெற்றோர் வசித்து வருகின்றனர். சிறிய நிலத்தில் மேற்கொண்டு வரும் விவசாய பணியில் வரும் சொற்ப வருவாயை அவர்கள் பெற்று வருகின்றனர்.
அவர்களின் ஒரே நம்பிக்கையாக, நாளைய கனவாக இருந்த இளைய மகளான ராஜியின் திடீர் மரணம் அவர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.






