ஈரானில் அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம்: 2 ஆயிரம் பேர் பலி

போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
தெஹ்ரான்,
ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும், அரசியல் குழப்பம், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சினைகள் அந்நாட்டில் நிலவி வருகிறது. இதன் காரணமாக அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் 31 மாகாணங்களில் போராட்டம் பரவியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பொதுமக்கள் கமேனி அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் கமேனி தலைமையிலான ஈரான் அரசு தீவிரம் காட்டி வருகிறது. போராட்டக்காரர்களை சுட்டுக்கொல்லும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், ஈரானில் நடைபெற்றுவரும் போராட்டத்தில் இதுவரை 2 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களில் குழந்தைகள் உள்பட 1,865 பேர் பொதுமக்கள் எனவும், 135 பேர் பாதுகாப்புப்படையினர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாக இதுவரை 10 ஆயிரத்து 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், போராட்டம் குறித்த தகவல்கள் பரவுவதை தடுக்க ஈரானில் பல்வேறு பகுதிகளில் இணையதள சேவையை ஈரான் அரசு துண்டித்துள்ளது. ஸ்டார்லிங் மூலம் இணையதள சேவை கிடைப்பதையும் முடக்க ஈரான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.






