எலான்மஸ்கின் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக உயர்வு

டிரம்புடன் மோதல் போக்கை கடைபிடித்த எலான் மஸ்க், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
வாஷிங்டன்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உலக பணக் காரர்கள் பட்டியலில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரூ.29 லட்சம் கோடியாக இருந்த அவரது சொத்து மதிப்பு கடந்த டிசம்பரில் ரூ.33 லட்சம் கோடியாக அதிகரித்தது. டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம், அவரது நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்பு போன்ற காரணங்களால் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு சொந்தமான பங்குகள் விலை அதிகரித்தன.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்புடன், எலன் மஸ்க் மோதல் போக்கை கடை பிடித்தார். டிரம்பை கடுமையாக விமர்சித்தார். அவரது அரசு பொறுப்பில் இருந்து விலகினார். அவருக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டார். இதனால் எலன்மஸ்க் பங்குகள் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் டிரம்பிடம் வருத்தம் தெரிவித்து கருத்துக் களை திரும்ப பெற்றார். அவருடன் சமரசம் செய்து கொண்டார். இருவரும் போனில் பேசிக் கொண்டனர்.
இந்த நிலையில் எலன்மஸ்க் சொத்து மதிப்பு இந்த வாரத்தில் உயர்ந்துள்ளது. போர்பஸ் வெளியிட்ட அறிக்கையின்படி எலான்மஸ்க் சொத்து மதிப்பு ரூ.35 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது. அமெரிக்கா மதிப்பில் 411.4 பில்லியன் டாலராக அதிகரித்து உள்ளது. உலக பணக்காரர்கள் பட்டியலில் 8 ஆண்டுகளுக்கு பிறகு அமேசான் நிறுவனர் ஜெப்பெசோஸ் 2-வது இடத்தை இழந்தார். ஆரக்லின் லாரி எலிசன் ரூ.20.9 லட்சம் கோடியுடன் 2-வது இடத்தில் உள்ளார். மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி 20.6 லட்சம் கோடியுடனும், ஜெப் பெசோஸ் ரூ.19½ லட்சம் கோடி சொத்து மதிப்புடனும் உள்ளனர்.






