பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பஜர் அலி உள்பட 5 பேர் கைது


பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பஜர் அலி உள்பட 5 பேர் கைது
x
தினத்தந்தி 30 Jun 2025 11:44 AM IST (Updated: 30 Jun 2025 5:13 PM IST)
t-max-icont-min-icon

பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பஜர் அலி உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டாக்கா,

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கத்தை எதிர்த்து கடந்த ஆண்டு மாணவர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தை தொடர்ந்து அவரது ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து வங்காளதேசத்தில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. பிரதமராக முகமது யூனிஸ் பதவியேற்றார்.

ஆனால் அதன் பிறகு வங்காளதேசத்தில் சிறுபான்மையின மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து காணப்படுகின்றன. சமீபத்தில் துர்க்கை அம்மன் கோவில் ஒன்று சூறையாடப்பட்டது. இந்த நிலையில், வங்காளதேசத்தில் 21 வயது இந்து பெண்ணை அரசியல் பிரமுகர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து, அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 26-ந்தேதி நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ராம்சந்திரபூரில் உள்ள பஞ்சிகிட்டா கிராமத்தை சேர்ந்தவர். அவரது கணவர் துபாயில் வேலை செய்து வரும் நிலையில், கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அந்த பெண் தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்திருந்தார்.

அன்றைய தினம் இரவு 10 மணியளவில் வங்காளதேச தேசியவாத கட்சியை சேர்ந்தவரான பஜர் அலி, இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து கத்தி முனையில் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் பஜர் அலியுடன் இருந்த நபர்கள் இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து பின்னர் அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனர்.

அந்த வீடியோ வைரலாக பரவிய நிலையில், நாடு முழுவதும் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பஜர் அலியை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே, வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினர் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டாக்காவில் மாணவர்கள் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது.

1 More update

Next Story