வங்காளதேசம்: இந்து வாலிபர் கொடூர கொலை, உடல் எரிப்பு வழக்கில் 10 பேர் கைது


வங்காளதேசம்:  இந்து வாலிபர் கொடூர கொலை, உடல் எரிப்பு வழக்கில் 10 பேர் கைது
x
தினத்தந்தி 20 Dec 2025 11:00 PM IST (Updated: 20 Dec 2025 11:01 PM IST)
t-max-icont-min-icon

வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை வழக்கில் 7 பேரை விரைவு அதிரடி படையினரும், மீதமுள்ள 3 பேரை போலீசாரும் கைது செய்தனர்.

டாக்கா,

வங்காளதேச நாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி, உயிர் தப்பினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார்.

இதன் பின்னர், பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் கிளர்ச்சியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார்.

அவர் தலைநகர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். இந்நிலையில், சில நாட்களாக சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வியாழக்கிழமை இரவு உயிரிழந்து விட்டார். அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை வெடித்தது.

இதில், முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு கொளுத்தப்பட்டது. வங்காளதேசத்தின் நிறுவன தந்தையான ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீடு மீதும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.

இந்த சூழலில், வங்காளதேசத்தில் மைமன்சிங் நகரை சேர்ந்த திபு சந்திரதாஸ் (வயது 25) என்ற வாலிபர் துணி தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வந்திருக்கிறார். அவர், மத நிந்தனை செய்து விட்டார் என கூறி அவருடைய ஆடைகளை களைந்து, நிர்வாணப்படுத்தி, ஒரு கும்பல் தொங்க விட்டுள்ளது. பின்னர் கம்பத்தில் கட்டி வைத்து, அடித்து கொலை செய்தது. இதன்பின்னர் அவருடைய உடலை சாலையில் போட்டு, தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு ஆளும் இடைக்கால அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதேபோன்று இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிகையாளர், குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். வன்முறை கும்பல், தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதம் ஆலோ ஆகிய இரு பத்திரிகை அலுவலகத்திற்குள் புகுந்து சூறையாடியது. பத்திரிகை வளாகம் ஒன்றில் தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி சென்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை பரவி பதற்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூர கொலை மற்றும் உடல் எரிப்பு தொடர்பான வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 19 முதல் 46 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதனை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் இன்று அறிவித்து உள்ளார்.

அவர்களில் 7 பேரை விரைவு அதிரடி படையினரும், மீதமுள்ள 3 பேரை போலீசாரும் கைது செய்தனர். புதிய வங்காளதேசத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை என இடைக்கால அரசு வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இந்த குற்ற செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் தப்ப முடியாது என்றும் தெரிவித்தது.

ஷேக் ஹசீனா பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்நாடு முழுவதும் சிறுபான்மையினருக்கு எதிரான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில், இந்து மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.

1 More update

Next Story