எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்
அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
வாஷிங்டன்,
அமெரிக்காவில் புதிதாக கட்சியை தொடங்கியுள்ள எலான் மஸ்க், தனது கட்சியின் பொருளாளராக வைபவ் தனேஜாவை நியமனம் செய்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். எலான் மஸ்க்கின் `டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா. இவரது நியமனத்திற்கு அமெரிக்கர்கள் சிலர் மத்தியில் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.
முன்னதாக, அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ் இல்லாமல் ஒரு கட்சி முறையின் கீழ் தான் வாழ்கிறோம் என்பது தெரிகிறது" என தனது எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் பதிவிட்டு இருந்தார். டிரம்புடன் மோதல் ஏற்பட்டதையடுத்து புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.