வெனிசுலா அதிபரை போல புதினை கடத்த திட்டமா? அமெரிக்க அதிபர் டிரம்ப் பதில்

வெனிசுலா நாட்டிற்குள் அமெரிக்கா ராணுவத்துறையினர் அதிரடியாக நுழைந்து மதுரோவை சிறைபிடித்தனர்
வாஷிங்டன்,
உக்ரைன்-ரஷியா இடையே போர் தொடங்கி 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்து வரும் அமைதி ஒப்பந்தங்களை ஏதேதோ காரணங்கள் கூறி ரஷிய அதிபர் புதின் நிராகரித்து வருகிறார். இதனால் போர் நிறுத்தம் தொடர்பாக தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.
அண்மையில், வெனிசுலா நாட்டிற்குள் அமெரிக்கா ராணுவத்துறையினர் அதிரடியாக நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை மனைவியுடன் நாடு கடத்தி நியூயார்க் சிறையில் அடைத்தனர். இதுகுறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, “சர்வாதிகாரியை எவ்வாறு நடத்தவேண்டும் என்பதற்கு நிக்கோலஸ் மதுரோ சம்பவம் ஓர் எடுத்துக்காட்டு. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது அமெரிக்காவுக்கு தெரியும். விரைவில் ரஷியா அதிபர் புதினை கைது செய்து நாடு கடத்துவார்கள்” என்றார்.
இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் “ரஷியாவுக்குள் புகுந்து புதினை நாடு கடத்தும் திட்டம் ஏதும் இல்லை. ரஷியாவுடன் அமெரிக்கா நல்ல உறவு கொண்டுள்ளது. ஆனால் எனக்கு ஏமாற்றம்தான். நான் உலகநாடுகளிடையேயான 8 போர்களை நிறுத்தினாலும் என்னால் உக்ரைன்-ரஷியா போரை நிறுத்த முடியவில்லை” என்றார்.






