வலிமையான கைகுலுக்கலாக இருந்தது: ஜப்பானின் முதல் பெண் பிரதமரை புகழ்ந்த டிரம்ப்

பிரதமராக டகாய்ச்சி பதவியேற்ற பின்னர், டிரம்புடன் நடந்த இந்த முதல் சந்திப்பானது முக்கியத்துவம் பெறுகிறது.
டோக்கியோ,
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஆசியாவில் உள்ள 3 நாடுகளுக்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டுக்கு அவர் சென்றார். அமெரிக்காவுடன் வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார விவகாரங்களில் நெருங்கிய ஒத்துழைப்புடன் செயல்படும் வகையில் டிரம்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சமீபத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் ஆசியான் உச்சி மாநாடு நடந்தது. இதில் டிரம்ப் பங்கேற்றார். இதன்பின்னர் அவர் ஜப்பானின் டோக்கியோ நகருக்கு சென்றுள்ளார்.
ஜப்பானின் முதல் பெண் பிரதமரான சனே டகாய்ச்சியை அந்நாட்டின் அகாசகா அரண்மனையில் நேரில் சந்தித்து உரையாடினார். டகாய்ச்சி பதவியேற்ற பின்னர், அவர்களுக்கு இடையே நடந்த இந்த முதல் சந்திப்பானது முக்கியத்துவம் பெறுகிறது. இதனால், இருதரப்பு பேச்சுவார்த்தை நேர்மறையாக தொடங்கியது.
இந்த சந்திப்பின்போது டிரம்பை டகாய்ச்சி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். இந்த சந்திப்பு பற்றி குறிப்பிட்ட டிரம்ப், அது வலிமையான கைகுலுக்கலாக இருந்தது என்றார்.
இதற்கு முன்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், ரஷியா சமீபத்தில் மேற்கொண்ட பியூர்வெஸ்ட்னிக் அணுசக்தி ஏவுகணை பரிசோதனை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பதிலளித்த டிரம்ப், உலகிலேயே மிக பெரிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் எங்களிடம் உள்ளது என அவர்களுக்கு தெரியும்.
அதனால், நான் கூறுவது என்னவென்றால், அந்த கப்பல் 8 ஆயிரம் மைல்கள் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டியிருக்காது என நினைக்கிறேன். அவர்கள் எங்களுடன் விளையாடவில்லை. நாங்களும் கூட அவர்களுடன் விளையாடவில்லை என்றார். ஏவுகணை பரிசோதனை பற்றி குறிப்பிட்ட அவர், நாங்கள் எல்லா நேரமும் ஏவுகணை பரிசோதனை செய்து கொண்டுதான் இருக்கிறோம் என்றார்.






