‘சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்ய பேச்சுவார்த்தை தொடர்கிறது’ - அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தகவல்

இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு, பல்வேறு நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கடும் வரி விதித்தார். அதன்படி இந்தியாவிற்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையில், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதை காரணம் காட்டி, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீதம் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதனால் இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டணி நாடாக அமெரிக்கா இருந்து வருகிறது. இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதி சுமார் 18 சதவீதமாகவும், இறக்குமதி 6.22 சதவீதமாகவும் உள்ளது. இந்தியாவின் மொத்த வணிக வர்த்தகத்தில் 10.73 சதவீதம் அமெரிக்காவை சார்ந்துள்ளது.
இந்த சூழலில், வரி மற்றும் வர்த்தக விவகாரங்களில் சமநிலையான தீர்வை எட்டுவதற்காக அமெரிக்க அரசுடன் இந்திய அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர். இது குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவத்ரா கூறுகையில், “வர்த்தகம் மற்றும் வரிகள் தொடர்பான விவகாரத்தில், கூடிய விரைவில் பரஸ்பர நன்மை பயக்கும், சமநிலையான வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த ஆண்டு முழுவதும் எங்களின் முயற்சி இதுவாகவே இருந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது இந்த பேச்சுவார்த்தைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டது. பல்வேறு துறைகளில், மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும் திட்டங்கள் குறித்து பேசி வருகிறோம். விண்வெளித் துறையும் அவற்றில் ஒன்றாகும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்காவின் AST ஸ்பேஸ்மொபைல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘ப்ளூபேர்ட்-6 (பிளாக்-2)’ எனப்படும் அடுத்த தலைமுறை வர்த்தக தொடர்பு செயற்கைக்கோள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் கனமான ராக்கெட்டான ‘LVM3-M6’ மூலம் நேற்று விண்ணில் ஏவப்பட்டு திட்டமிடப்பட்ட துல்லியமான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்டதிலேயே மிகவும் கனமான வர்த்தக செயற்கைக்கோளை LVM3 ராக்கெட் சுமந்து சென்றது ஒரு வரலாற்று நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவில் ஒரு முக்கியமான நாள் என்று வினய் மோகன் குவத்ரா தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு விண்வெளி ஒத்துழைப்பில் 2025-ம் ஆண்டில் எட்டப்பட்ட தொடர்ச்சியான சாதனைகளுக்கு ஒரு மகுடமாக திகழ்கிறது என்று அவர் கூறினார்.






