நேபாள வன்முறை - உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு


நேபாள வன்முறை - உயிரிழப்பு 30 ஆக அதிகரிப்பு
x

2 நாள் வன்முறைக்கு பின் நேபாளத்தில் மெல்ல மெல்ல அமைதி நிலை திரும்பி வருகிறது.

காட்மாண்டு,

அண்டை நாடான நேபாளத்தில், சமீபகாலமாக மாணவர்களும், இளைஞர்களும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள். இளைய தலைமுறையை குறிக்கும்வகையில், ‘ஜென் சி’ என்ற குழுவை தொடங்கி, சமூக வலைத்தளங்கள் மூலமாக ஊழல் எதிர்ப்பு பிரசாரம் செய்து வருகிறார்கள்.

மந்திரிகள் மற்றும் அதிகாரம் மிக்கவர்களின் வாரிசுகள் எப்படி ஆடம்பர வாழ்க்கை வாழ்கின்றனர் என்று புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டனர். ஆடம்பர வாழ்க்கைக்கான பணம் எப்படி வந்தது? ஊழல் மூலம் வந்ததா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இதனால், நேபாள அரசுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. நேபாளத்தில் இயங்கி வரும் சமூக வலைத்தளங்கள் தங்களை 7 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தகவல் தொடர்பு அமைச்சகம் ‘கெடு’ விதித்தது. அந்த கெடுவுக்குள் பதிவு செய்யாத பேஸ்புக், வாட்ஸ்அப், எக்ஸ், இன்ஸ்டாகிராம் உள்பட 26 சமூக வலைத்தளங்கள் மீது நேபாள அரசு தடை விதித்தது.

இதனால், நேபாள மாணவர்களும், இளைஞர்களும் ஆத்திரம் அடைந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் தலைநகர் காட்மாண்டுவில் ‘ஜென் சி’ அமைப்பின்கீழ் ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.

நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.

போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அதில், 19 பேர் பலியானார்கள். அவர்களில் ஒருவர் 12 வயது மாணவர் ஆவார். மோதல் மற்றும் கல்வீச்சில், போலீசார், போராட்டக்காரர்கள் உள்பட 300-க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்தநிலையில், நேபாள வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. 2 நாள் வன்முறைக்கு பின் அமைதி திரும்பிய நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

வன்முறை தீவிரமடைந்ததையடுத்து நேபாள பிரதமர், அமைச்சர்கள் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் நேபாள நாட்டின் இடைக்கால தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘ஜென் சி’ இளைஞர்களின் போராட்டத்தை அடுத்து பிரதமராக இருந்த சர்மா ஒலி ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் சந்திரா பவுடலும் ராஜினாமா செய்தார். குடியரசுத் தலைவர், பிரதமர் என அடுத்தடுத்து ராஜினாமா செய்த நிலையில் இடைக்கால தலைவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே போராட்டத்தின் போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது பாதுகாப்பு சாதனங்களை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என மாணவர்களுக்கு நேபாள ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நேபாளத்தில் நடந்த போராட்டங்களின் போது சுமார் 13,500க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது.

1 More update

Next Story