அமீரக அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் சந்திப்பு


அமீரக அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் சந்திப்பு
x

துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் அமீரகம் வருகை தந்தார்.

அபுதாபி,

துபாயில் ஆண்டுதோறும் உலக அரசு உச்சி மாநாடு நடந்து வருகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு அரசுகளுக்கான புதுமையான தீர்வுகள் குறித்து ஆலோசனை மற்றும் கலந்துரையாடி வருகின்றனர். அந்த வரிசையில் நடப்பு ஆண்டுக்கான உலக அரசு உச்சி மாநாடு துபாய் எதிர்கால அருங்காட்சியக வளாகத்தில் நேற்று தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டின் முதல் நாளில் உரையாற்ற வருகை புரிந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் அபுதாபிக்கு வந்தார். அப்போது கஸர் அல் சாத்தி அரண்மனை வளாகத்தில் அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யானை சந்தித்து பேசினார்.

இதில் இருதரப்பில் பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. தொடர்ந்து மத்திய கிழக்கு பிரதேசத்தின் முன்னேற்றங்கள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் இரு தலைவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் கூறும்போது, ''அமீரகத்துடனான வரலாற்று ரீதியிலான உறவுகளை வலுப்படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளோம். குறிப்பாக இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் முன்னுரிமை அளிக்கும் பொருளாதாரம், வர்த்தகம், முதலீட்டு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பின் எல்லைகளை விரிவுபடுத்தவும் பாகிஸ்தான் ஆர்வமாக உள்ளது'' என குறிப்பிட்டார்.

1 More update

Next Story