வங்கதேசத்தில் நாடாளுமன்றம் முற்றுகை: பதற்றம் அதிகரிப்பு

நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது
டாக்கா,
வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு காரணமாக இருந்த மாணவர் போராட்டத்தை முன்நின்று நடத்தியவர்களில் முக்கிய தலைவராக இருந்த ஷெரீப் உஸ்மான் ஹாடி (வயது 32) மீது கடந்த 12-ந்தேதி மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவரது தலையில் குண்டு பாய்ந்தது.ஷெரீப் உஸ்மானின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதனால் வங்காளதேசத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவர்கள் போராட்டங்களில் குதித்தனர்.இதில் வன்முறை வெடித்தது. 2 பத்திரிகை அலுவலகங்கள் மற்றும் முன்னாள் பிரதமர் முஜிபுர் ரகுமான், ஷேக் ஹசீனா வீடுகள், அவாமி லீக் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.
தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருந்த இங்குலாப் மாஞ்சா அமைப்பின் தலைவரான ஷெரீப் உஸ்மான், இந்தியாவுக்கு எதிராக பேசி வந்தார்.இதனால் இந்திய தூதரகங்கள், இந்திய தூதர் வீடு ஆகியவை மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் இந்து வாலிபர் ஒருவர்அடித்து கொல்லப்பட்டார்.போராட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. வங்காளதேசத்தில் நேற்று அதிகாலை வரை வன்முறை நடந்தது. பின்னர் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட ஷெரீப் உஸ்மான் ஹாடியின் உடல் நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து வங்காளதேசத்துக்கு கொண்டு வரப்பட்டது. விமானம் மூலம் தலைநகர் டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது உடல் பலத்த பாதுகாப்புடன் வெளியே கொண்டு செல்லப்பட்டது.ஷெரீப் உஸ்மான் ஹாடியின் உடல் அடக்கம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்நாட்டின் பாராளுமன்றத்தின் தெற்கு வளாகத்தில் உடல் நல்லடக்க பிரார்த்தனை நடைபெறும் என்றும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளின்படி தேசியக் கவிஞர் காசி நஸ்ருல் இஸ்லாமின் கல்லறைக்கு அருகில் ஷெரீப் உஸ்மானின் உடல் அடக்கம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஷெரீப் உஸ்மானின் உடலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் நிகழ்வு இல்லை என்றும், மக்கள் ஒழுங்கைப் பேணி அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் இங்குலாப் மாஞ்சா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது. அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் எந்தவிதமான பைகள் அல்லது கனமான பொருட்களையும் கொண்டு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷெரீப் உஸ்மானின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து இளைஞர்கள் தலைநகர் டாக்காவில் குவிந்துள்ளனர். இதையடுத்து டாக்காவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களுக்கு ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர் போராட்டங்களால் வங்காளதேசத்தில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.






