புதினின் பயணத்தில் அரசியல் முதல் அறிவியல் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் புதின் சந்தித்து பேச இருக்கிறார்.
புதினின் பயணத்தில் அரசியல் முதல் அறிவியல் வரை இந்தியாவுடன் பேச்சுவார்த்தை
Published on

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்த பயணத்தில், பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார். இதுபற்றி ரஷிய கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்தது.

அரசியல், வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் முதல் அறிவியல், தொழில் நுட்பம், கலாசாரம் மற்றும் மனிதாபிமான ஒத்துழைப்பு ஆகியவற்றில் ரஷியா மற்றும் இந்தியாவின் சிறப்பு மற்றும் தனியுரிமை சார்ந்த நட்புறவு தொடர்பான விசயங்களை மறுஆய்வு செய்வதற்கான வாய்ப்பாக இந்த பயணம் அமையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்பின்னர், இருதரப்பிலும் கூட்டாக அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான அளவிலான வர்த்தக ஒப்பந்தங்களும் ஏற்படுத்தப்படும் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. இந்த பயணத்தின்போது இந்தியா-ரஷியா 23-வது வருடாந்திர உச்சி மாநாட்டிலும் புதின் கலந்து கொள்வார்.

இதில் நடப்பு நிலையிலான சர்வதேச மற்றும் மண்டல விவகாரங்கள் பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். இந்த பயணத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்முவையும் புதின் சந்தித்து பேச இருக்கிறார்.

கடந்த ஆகஸ்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டபோது, இரு நாட்டு தலைவர்களின் உயர்மட்ட சந்திப்பு பற்றி முதன்முறையாக தோவல் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அப்போது சந்திப்புக்கான தேதி பற்றி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், புதினின் இந்திய வருகைக்கான தேதி உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு, கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் தொடங்கியது. செப்டம்பர் 1-ந்தேதியும் தொடர்ந்தது. இந்த 2 நாள் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இருவரும் இருதரப்பு சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது, புதின் தன்னுடைய ஆடம்பர மற்றும் அதிக பாதுகாப்பு கொண்ட லிமோசின் ரக காரில் வரும்படி கூறி பிரதமர் மோடியை அழைத்து சென்றார். இருவரும் காரில் ரிட்ஜ்-கார்ல்டன் ஓட்டலுக்கு சென்றனர். அதற்கு முன், பிரதமர் மோடி வருவதற்காக 10 நிமிடங்கள் வரை புதின் காத்திருந்தபடியே காணப்பட்டார். அவர் வந்ததும் இருவரும் ஒரே காரில் ஒன்றாக சென்றனர். அப்போது பல்வேறு விசயங்களை பற்றி அவர்கள் உரையாடினர்.

கார் ஓட்டலை அடைந்த பின்னரும், அவர்கள் இருவரும் 45 நிமிடங்கள் காரில் அமர்ந்து பேசியபடி இருந்தனர். இது அப்போது சர்வதேச அளவில் பரபரப்பாக பார்க்கப்பட்டது. இதன்பின்னர் நடந்த இருதரப்பு சந்திப்பில் இருவரும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தியாவும் ரஷியாவும், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளில் நீண்டகால தொடர்பில் உள்ளவை. இரு நாடுகளும் பல ஆண்டுகளாக பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தி உள்ளதுடன், இருதரப்பு வர்த்தகமும் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சமடைந்து உள்ளது.

இந்தியாவுக்கான ஆயுத விநியோகத்திற்கான முக்கிய நாடுகளில் ஒன்றாக ரஷியா உள்ளது. உக்ரைனுக்கு எதிராக 3 ஆண்டுகளுக்கு முன் ரஷியாவின் போர் தொடங்கியதில் இருந்து, அந்நாட்டிடம் இருந்து எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. இதற்கு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியா மீது 25 சதவீத அபராதம் உள்ளிட்ட கூடுதல் வரிகளையும் விதித்தது. எனினும், இந்தியா மற்றும் ரஷியா இடையிலான வர்த்தகத்தில் சுமுக உறவு காணப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com