ஜப்பானில் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி

Photo Credit: AP
ஜப்பான் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியுற்றது. இதன்மூலம் இரு அவைகளிலும் ஆளுங்கட்சி தனிப்பெரும்பான்மையை இழந்தது.
டோக்கியோ,
ஜப்பானில் பிரதமர் ஷிகெரு இஷிபா தலைமையிலான லிபரல் டெமாக்ரடிக் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இதற்கிடையே நாடாளுமன்றத்தின் மேல்சபை தேர்தல் நடந்து முடிந்தது. மேல்சபையை பொறுத்தவரை எளிய பெரும்பான்மை பெற 125 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆளுங்கட்சிக்கு ஏற்கனவே 75 இடங்கள் இருந்தன.
எனவே இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற மேலும் 50 இடங்களில் வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் லிபரல் டெமாக்ரடிக் கட்சிக்கு 47 இடங்களே கிடைத்தன. இதனால் ஆளுங்கட்சி இரு அவைகளிலும் தனிப்பெரும்பான்மையை இழந்தது. இது ஆளுங்கட்சிக்கு விழுந்த மற்றொரு அடியாகும். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தின் கீழ்சபை தேர்தலிலும் லிபரல் டெமாக்ரடிக் கட்சி தோல்வியடைந்தது.
1955-ம் ஆண்டு கட்சி தொடங்கியதில் இருந்து லிபரல் டெமாக்ரடிக் கட்சி இரு அவைகளிலும் பெரும்பான்மையை இழப்பது இதுவே முதல்முறை ஆகும். இந்த தொடர் தோல்விகள் ஆளுங்கட்சிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்துள்ளது. எனினும் அமெரிக்க வரி அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் தான் பதவி விலக போவதில்லை எனவும், கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தலைமை பொறுப்பை ஏற்று நாட்டுக்காக தொடர்ந்து உழைப்பேன் எனவும் பிரதமர் ஷிகெரு இஷிபா தெரிவித்துள்ளார்.






