தென்கொரியாவில் வகுப்பறையில் மாணவியை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை

தென்கொரியாவில் வகுப்பறையில் மாணவியை கொன்ற ஆசிரியைக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியா,
தென்கொரியா நாட்டின் டேஜியான் நகரில் வசித்து வந்தவர் மையாங் ஜே வான்(வயது 48). இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த பள்ளியில் படித்த 8 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் மையாங், பள்ளிக்கூட வகுப்பறையில் வைத்து கொலை செய்தார்.
அதாவது அந்த சிறுமி பையில் கத்தியுடன் பள்ளிக்கு வந்திருந்ததாகவும், அவள் சக மாணவ-மாணவிகளை கத்தியால் குத்தி கொலை செய்ய திட்டமிட்டதாகவும், அதை தான் தடுத்ததாகவும் மையாங் கூறினார். மேலும் அவர் கூறுகையில், அந்த சிறுமியை தடுத்தபோது அவள் தன்னை கத்தியால் குத்தியதாகவும், அதனால் அவளை தான் திருப்பி தாக்க நேரிட்டதாகவும் தெரிவித்தார்.
ஆனால் மையாங்கின் தாக்குதலில் படுகாயம் அடைந்த சிறுமி பலியாகி இருந்தாள். அவளது உடலில் கத்திக்குத்து காயங்களும் இருந்தன.இதையடுத்து மையாங்கை கைது செய்த போலீசார் அவர் மீது டேஜியான் நகர கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் குற்றவாளியான மையாங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் 30 ஆண்டுகளுக்கு அவர் தனது கையில், போலீசாரால் கண்காணிக்கப்பதற்காக வழங்கப்படும் கருவியை பொருத்தி இருக்க வேண்டும் என்றும் கூறி உத்தரவிட்டார். தென்கொரிய நாட்டை உலுக்கிய இந்த சம்பவத்துக்கு 8 மாதங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






