ஈரான் தலைவர் காமேனியை டிரம்ப் கொல்ல போகிறார்; செனட்டர் எச்சரிக்கை

அயோதுல்லாவிடம் இருந்து உங்களுடைய நாட்டை நீங்கள் திருப்பி எடுத்து கொள்ள உறுதுணையாக நிற்கிறோம் என லிண்ட்சே கூறினார்.
வாஷிங்டன் டி.சி.,
ஈரான் நாட்டின் தலைவராக அயோதுல்லா அலி காமேனி இருந்து வருகிறார். ஈரான் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக தொடர்ந்து வருகிறது. அந்நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனால், அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களை ஒடுக்க அரசு, பாதுகாப்பு படையினரை இறக்கி விட்டு உள்ளது. ஒருபுறம் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டபோதும், வன்முறை, போராட்டத்தில் சிக்கி பலர் பலியாகி வருகின்றனர். இதுபற்றி உள்ளூர் அரசு ஊடகம் மற்றும் மனித உரிமை குழுக்கள் கூறும்போது, பலர் கொல்லப்பட்டும், பலர் காயமடைந்தும் உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இதன்படி, 38 பேர் வரை பலியாகி உள்ளனர். ஈரான் மக்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது. அதற்கேற்ப, அமைதியாக போராடும் போராட்டக்காரர்களை வழக்கம்போல் ஈரான் சுட்டு கொன்றால், அவர்களை மீட்பதற்காக அமெரிக்கா முன்வரும். நாங்கள் துப்பாக்கி ஏந்தி, போருக்கு செல்ல தயாராக இருக்கிறோம் என்று டிரம்ப் கூறினார். ஈரானை மீண்டும் சிறந்த நாடாக ஆக்குவோம் என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில், குடியரசு கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினரான லிண்ட்சே கிரகாம் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ஈரான் மக்களே. உங்களுடன் நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
உங்களை கொலை செய்து, உலகை பயங்கரவாதத்துக்கு ஆட்படுத்தும் அயோதுல்லாவிடம் இருந்து உங்களுடைய நாட்டை நீங்கள் திருப்பி எடுத்து கொள்ள உறுதுணையாக நிற்போம். உங்களுக்காக வேண்டி கொள்கிறோம். டொனால்ட் டிரம்ப் ஒன்றும் ஒபாமா அல்ல.
அயோதுல்லாவுக்கு ஒன்று கூறி கொள்கிறேன். நல்ல வாழ்க்கை வேண்டும் என கேட்டு போராடும் உங்களுடைய மக்களை நீங்கள் தொடர்ந்து கொன்று குவித்தீர்களானால், உங்களை டிரம்ப் கொல்ல போகிறார். நீங்களும் உங்களுடைய ரவுடி கும்பலும் மரணிக்க போகின்றீர்கள் என எச்சரித்து உள்ளார்.






