‘டிரம்ப்-புதின் சந்திப்பு.. உங்கள் அம்மாதான் தேர்வு செய்தார்’ - பத்திரிகையாளருக்கு காட்டமாக பதிலளித்த கரோலின் லெவிட்

புடாபெஸ்ட் நகரில் ரஷிய அதிபர் புதினை விரைவில் நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்,
ரஷியா - உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி அலாஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் தொடர்பாக எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
இதனையடுத்து கடந்த 18-ந்தேதி வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை நேரில் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின்போது உக்ரைனின் பாதுகாப்பு, ஆற்றல் தேவைகள் மற்றும் ரஷியா மீதான தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து விரைவில் புதினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அலாஸ்காவில் நடைபெற்ற முதல் சந்திப்பை தொடர்ந்து, 2-வது பேச்சுவார்த்தை ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் நடைபெற உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த சந்திப்பு எப்போது நடைபெற உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லெவிட் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனியார் செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய குறுஞ்செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை கரோலின் பகிர்ந்துள்ளார்.
அதில், “புடாபெஸ்ட் நகரம் குறித்து டிரம்ப்புக்கு தெரியுமா? சோவியத் ஒன்றியம் கலைந்தபோது, உக்ரைன் அரசு தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டால், உக்ரைன் மீது படையெடுக்க மாட்டோம் என கடந்த 1994-ம் ஆண்டு புடாபெஸ்ட் நகரில் ரஷியா உறுதியளித்தது. தற்போது அங்கு நடைபெற உள்ள சந்திப்பில் கலந்து கொள்ள உக்ரைன் மறுப்பு தெரிவிக்கலாம் என்பது அதிபர் டிரம்ப்புக்கு தெரியவில்லையா? புடாபெஸ்ட் நகரை யார் தேர்வு செய்தார்?” என்று பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு கரோலின் லெவிட், “உங்கள் அம்மாதான் தேர்வு செய்தார்” என்று காட்டமாக பதிலளித்துள்ளார். அந்த பத்திரிகையாளர், “உங்களுக்கு இது வேடிக்கையாக தெரிகிறதா?” என்று கேட்டதற்கு, கரோலின் லெவிட், “ஆம், உங்களை நீங்கள் பத்திரிகையாளர் என்று நினைத்துக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. நீங்கள் ஒரு தீவிர இடது சாரி கைக்கூலி. உங்களை யாரும் மதிப்பதில்லை. இதுபோன்ற சார்புடைய, அர்த்தமற்ற கேள்விகளை என்னிடம் கேட்பதை நிறுத்துங்கள்” என்று பதிலளித்துள்ளார்.






