வெனிசுலாவுக்குள் புகுந்து கெட்டவர்கள் மீது விரைவில் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் - டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலாவில் நிலத்தின் வழியே தாக்குதல் நடத்துவது எங்களுக்கு எளிது என டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான அரசு ஆட்சி செய்து வருகிறது. போதை பொருள் ஒழிப்புக்கான நடவடிக்கையில் டிரம்ப் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, கரீபியன் கடற்பகுதிகளில் போதைபொருள் கடத்தல்காரர்களின் படகுகளை, அமெரிக்க கடற்படை கடந்த செப்டம்பர் 2-ந்தேதி தாக்கி அழித்தது. இதன் தொடர்ச்சியாக கடத்தல்காரர்களின் பல படகுகளை அடுத்தடுத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி அழித்தது.
இதில், 80 பேர் வரை கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் போதைபொருள் கடத்தல்காரர்களா? என்ற கேள்வியும், சந்தேகமும் பல்வேறு நாடுகளுக்கும் எழுந்துள்ளது. இதனால், டிரம்ப மற்றும் அமெரிக்க அரசுக்கு எதிராக கண்டனமும் எழுந்துள்ளது.
இந்த போதைபொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் வெனிசுலா நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர் என அமெரிக்கா குற்றச்சாட்டை கூறி வருகிறது. இதனால், வெனிசுலாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே பதற்ற நிலை உருவாகி உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் மந்திரி சபை கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. இதில் பேசிய டிரம்ப், வெனிசுலாவுக்குள் வாழும் கெட்டவர்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா விரைவில் மேற்கொள்ளும். நிலம் வழியாக கூட நாங்கள் இந்த தாக்குதலை தொடங்க உள்ளோம். நிலத்தின் வழியே தாக்குதல் நடத்துவது எளிது.
அவர்கள் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும். கெட்ட மனிதர்கள் வசிப்பிடம் எது என எங்களுக்கு நன்றாக தெரியும். விரைவில் நாம் தாக்குதலை தொடுக்க உள்ளோம் என்று கூறினார். டிரம்ப்பின் இந்த பேச்சால், வெனிசுலாவுக்குள் புகுந்து அமெரிக்கா விரைவில் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நிலைமையை இன்னும் மோசமடைய செய்ய கூடும் என்றும் பார்க்கப்படுகிறது.






