டிரம்பின் வலது கையில் என்ன காயம்...? கரோலின் லீவிட் பரபரப்பு விளக்கம்

சமூக ஊடக பயனாளர்கள், இளஞ்சிவப்பு நிறத்தில் பேண்டேஜ் போடப்பட்டு உள்ள அவருடைய வலது கையை புகைப்படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டனர்.
வாஷிங்டன் டி.சி.,
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் (வயது 79) பதவி வகித்து வருகிறார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்து வருகிறார். உலக அரசியல் அரங்கில் பரபரப்பாகவே அவர் செயல்பட்டு வருகிறார்.
சமீபத்தில் அவருடைய உடல்நலன் சார்ந்த விசயங்கள் பரவலாக பேசப்பட்டன. அவர் முன்பு போல் செயல்பட முடியவில்லை என தகவல்கள் பரவின. எனினும், இதில் உண்மையில்லை என மறுத்த அவர், செய்தி நிறுவனங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன என குற்றச்சாட்டாக கூறினார்.
இந்நிலையில், டிரம்பின் வலது கையின் மேல்பகுதியில் பேண்டேஜ் போடப்பட்டு இருந்தது. காயத்திற்கு போடப்படும் இந்த பேண்டேஜ் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பின. டிரம்பின் உடல்நல பாதிப்பு பற்றி பல வாரங்களாக யூகங்கள் பரவி வந்த நிலையில், இந்த விசயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
டிரம்ப், அவருடைய கையில் போடப்பட்ட பேண்டேஜ் வெளியே தெரியாத வகையில், அவருடைய தோலின் நிறத்திற்கு ஒத்து போக கூடிய வகையில், மேக்-அப் சாதனத்தின் உதவியுடன் அதனை மறைக்க முயன்றிருக்கிறார். எனினும், சமூக ஊடக பயனாளர்கள் மற்றும் அரசியல் நோக்கர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் பேண்டேஜ் போடப்பட்டு உள்ள அவருடைய வலது கையை புகைப்படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டனர். இதனை கவனித்து பகிரங்கப்படுத்தி வருகின்றனர்.
இதுபற்றி வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்போது, இதில் கவலைப்பட கூடிய விசயம் என்று எதுவும் இல்லை என கூறியதுடன், அந்த அடையாளங்கள் எல்லாம், டிரம்பின் நெருக்கடியான வேலைப்பளு மற்றும் அடிக்கடி விருந்தினர்களுடன் கைகுலுக்குவது ஆகியவற்றால் ஏற்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. டிரம்ப், நாள்தோறும் நிறைய பேரை சந்திக்கிறார். அப்போது அவர்களுடன் கைகுலுக்குகிறார். அதனால் அப்படி ஏற்பட்டு உள்ளது. அவர் தினசரி சிறிதளவு ஆஸ்பிரின் மருந்து எடுத்து வருகிறார். இதனால் கூட, இந்த சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.






