மஞ்சள் குங்குமத்தின் மகிமை
அம்பிகைக்கு விரதம் இருப்பவர்கள், மஞ்சளாடை அணிதல் மற்றும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வதால் ஆரோக்கியமும் ஆனந்த வாழ்வும் சேரும்.
மஞ்சள் - குங்குமம் இந்த இரண்டிலும் மகாலட்சமி வாசம் செய்வதாக ஐதிகம். இயற்கையாகவே மஞ்சள் கிருமிநாசினி என்பதை நாம் அறிவோம். வெப்பத்தால் ஏற்படக்கூடிய நோய்கள், மழைக்காலத்தில் வரக்கூடிய நோய்கள் (மழை பூமியில் இருக்கிற வெப்பத்தை வெளிப்படுத்துவதால், அந்த வெப்பத்தினால் பல வியாதிகள் வருகிறது) இதற்கெல்லாம் மஞ்சள்தான் மாமருந்தாகிறது.
மஞ்சள் சுமங்கலிப் பெண்களுக்கு கொடுத்தால் பல ஜென்மங்களில் செய்த முன் வினைகள் தீரும், சவுபாக்கியங்களும் கிட்டும். சந்தோஷம் அதிகரிக்கும் என்று மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
விரதங்களின்போது கடைபிடிக்க வேண்டிய முறைகள் தொடர்பான புராண தகவல்களில் மஞ்சளின் மகிமை குறித்தும் சொல்லப்பட்டுள்ளது.
அம்பிகைக்கு விரதம் இருக்கிறவர்கள், மஞ்சளாடை அணிதல் மற்றும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்வதன்மூலம் ஆரோக்கியமும் ஆனந்த வாழ்வும் சேரும். பொதுவாக பெண்களின் புருவ மத்தியில் அஷ்டலட்சுமியின் ஓர் அம்சம் வாசம் செய்வதாக ஒரு ஐதீகம் உண்டு. அந்த அஷ்டலட்சுமி குறிப்பாக சுமங்கலி பெண்களுக்குதான் பாதிப்பை ஏற்படுத்துவாளாம். அதாவது கணவரின் உடல் நலத்தை பாதிக்கச் செய்வாளாம். அவளின் பார்வை நேரடியாக கணவர் மேல் படக்கூடாது என்பதற்காகத்தான் பெண்கள் குங்குமப்பொட்டு, இட்டுக் கொள்ள வேண்டும் என்று வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இது மட்டுமில்லாமல் பெண்களின் தலை வகிட்டின் ஆரம்பத்தில் (அந்த இடத்தை சீமந்தம் என்று சொல்வார்கள்) ஸ்ரீ தேவி வாசம் செய்வதாகக் கூறுவர். பார்வதி தேவி தன் சீமந்தத்தில் (உச்சி வகிட்டில்) இட்டுக் கொள்கிற குங்குமத்தின் பாக்கியம்தான். சிவனை ஆதி முதல்வனாகவும், ஊழிக்கு அப்புறம் உலகையே படைக்க கூடிய வல்லமை உள்ளவராகவும் எல்லா செல்வங்களுக்கும் காரணமாகவும் நிலைத்திருக்க வைத்திருக்கிறது என்று ஆதி சங்கரர் தன்னுடைய சவுந்தர்யலகரியில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட உயர்வான மஞ்சளும், குங்குமமும் அம்மன் கோவில் பிரசாதங்களில் முக்கியத்துவம் வாய்ந்தது.