வினைப்பயனில் இருந்து விடுபட நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வழிபாடு
பல ஜென்மங்களாக தொடரும் கடுமையான தோஷத்திலிருந்து விடுபட நாக சதுர்த்தி பூஜை மற்றும் கருட பஞ்சமி பூஜை செய்யலாம்.
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்தது மட்டுமல்லாமல் இந்த மாதத்தின் திதிகள், நட்சத்திரங்கள், கிழமைகள் மனித குலத்திற்கு புண்ணிய பலன்களை வாரி வழங்கும் வல்லமை படைத்தவைகள். ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி செவ்வாய் கிழமை, வரலட்சுமி நோன்பு போன்று நாக சதுர்த்தி, கருட பஞ்சமி ஆகிய நாட்களும், வழிபாட்டின் மூலம் பிறவிப் பிணியை தீர்க்க சிறந்த நாட்களாகும்.
பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில பட்ச பஞ்சமி என்றும், பவுர்ணமிக்கு அடுத்து வரும் பஞ்சமி தினம் கிருஷ்ண பட்ச பஞ்சமி என்றும் அழைக்கப்படுகிறது. பஞ்சமி திதி என்பது ஒரு மகத்தான திதியாகும்.
நவகிரகங்களின் இயக்கமே மனிதன் உள்பட அனைத்து ஜீவராசிகளின் வாழ்க்கையையும் தீர்மானிக்கிறது. இதில் உருவம் உள்ள ஏழு கிரகங்களைக் காட்டிலும் உருவமற்ற இரண்டு நிழல் கிரகங்களாகிய ராகுவும், கேதுவுமே மனித வாழ்வை தீர்மானிக்கின்றன. ஆண்டியை அரசனாக்கும் வல்லமை ராகுவுக்கும், அரசனை ஞானியாக்கும் ஆற்றல் கேதுவுக்கும் உண்டு. ராகு தான் அமர்ந்த பாவகத்தின் செயலை பிரம்மாண்டப்படுத்தும். கேது சுருக்கும். ராகு,கேதுவினால் தான் ஒருவர் மிகப் பெரிய யோகம் அல்லது அவயோகத்தை சந்திக்கின்றார்கள். மனிதர்களுடைய வாழ்வில் மாற்றங்களை வழி நடத்தக் கூடிய கர்ம வினை அதிகாரிகளாக ராகு,கேதுக்களை கூறலாம்.
மீள முடியாத வினைப்பயனில் இருந்து விடுபட சர்ப்ப வழிபாட்டையும், கருட வழிபாட்டையும் ஜோதிட முன்னோடிகள் வலியுறுத்துகின்றனர். சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் இன்னல்களை நீக்கும் வலிமை கருட பகவானுக்கு மட்டுமே உண்டு.
ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தியில் நாக சதுர்த்தியும், வளர்பிறை பஞ்சமியில் கருட பஞ்சமியும் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு 8.8.2024- வியாழக்கிழமை (ஆடி 23) அன்று நாக சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. 9.8.2024- வெள்ளிக்கிழமை (ஆடி 24) அன்று கருட பஞ்சமி கொண்டாடப்படுகிறது.
பல ஜென்மங்களாக தொடரும் கடுமையான தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த வழிபாடு நாக சதுர்த்தி பூஜை மற்றும் கருட பஞ்சமி பூஜையாகும். நாக தோஷம் யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். அதீத திருமணத்தடை, கணவன். மனைவி பிரிவினை, புத்திர பாக்கியமின்மை, பிள்ளைகளால் மன உளைச்சல், தீராத நோய், பரம்பரை வியாதி, குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்வது போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருவார்கள்.
கணவன்- மனைவி ஒற்றுமை, குடும்ப முன்னேற்றம், குழந்தைகள் நலன் ஆகியவற்றுக்காக நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி வழிபாட்டை பெண்கள் மேற்கொண்டால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.