முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை...?


முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது; சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை...?
x
தினத்தந்தி 22 March 2024 12:18 AM GMT (Updated: 22 March 2024 5:34 AM GMT)

கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சசி தரூர் என கூட்டணியில் இடம் பெற்ற கட்சி தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்-மந்திரி மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை, விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியிருந்தது.

ஆனால், அமலாக்கத்துறையின் சம்மன் சட்ட விரோதமானது என்று கூறி கெஜ்ரிவால் ஆஜராக மறுத்து வந்தார். இது தொடர்பான வழக்கு டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்ற நிலையில், கெஜ்ரிவாலின் வழக்கை தள்ளுபடி செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, அமலாக்கத்துறை கைதுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. இந்த நிலையில், 12 அதிகாரிகள் கொண்ட அமலாக்கத்துறை குழுவினர், நேற்று கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, அமலாக்க பிரிவு அதிகாரிகள் கெஜ்ரிவாலை நேற்று இரவு கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கெஜ்ரிவால் வீட்டின் முன் ஆம் ஆத்மி தொண்டர்கள் குவிந்தனர். கலவரம் பரவாமல் இருக்க போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது என ஆம் ஆத்மி முடிவு செய்தது. அதற்கான துரித நடவடிக்கையில் இறங்கியது. அக்கட்சியின் மந்திரியான அதிஷி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், அமலாக்க அதிகாரிகளின் இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து, அதனை சட்டப்படி செல்லாதது என அறிவிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் ஆம் ஆத்மி மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு இன்றிரவே அவசர வழக்காக இதனை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் கேட்டுள்ளோம் என அவர் நேற்று கூறினார்.

எனினும், கெஜ்ரிவாலின் மனுவை விசாரிக்க என்று தனியாக சிறப்பு சுப்ரீம் கோர்ட்டு அமர்வு எதுவும் நேற்றிரவு அமைக்கப்படவில்லை. இதனால், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என பார்க்கப்படுகிறது.

இந்தியா கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், கெஜ்ரிவாலுக்கு தங்களுடைய ஆதரவை வழங்கினர். இந்த கைது நடவடிக்கைக்கு அகிலேஷ் யாதவ், மெகபூபா முப்தி, ராகுல் காந்தி, சரத் பவார், பிரியங்கா காந்தி, மு.க. ஸ்டாலின், சசி தரூர் என கூட்டணியில் இடம் பெற்ற கட்சி தலைவர்கள் பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்து உள்ளனர்.

ஆனால், அமலாக்க அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. ஆதரவு தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். உண்மை வெளிவரவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கெஜ்ரிவால் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்றும் ஆம் ஆத்மி தெரிவித்து உள்ளது.

இந்த சூழலில், மத்திய டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையின் தலைமையகத்திற்கு கெஜ்ரிவால் கொண்டு செல்லப்பட்டார். இந்த விசயத்தில், முதல்-மந்திரியாக இருக்கும்போது, ஒருவர் கைது செய்யப்படுவது என்பது முதல் முறையாகும்.

இதற்காக 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்த அரசு பங்களாவில் விசாரணைக்காக சென்றனர். அவர்கள் 2 மணிநேரத்திற்கும் கூடுதலாக விசாரணை நடத்திய பின்னரே, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன என்று கூறப்படுகிறது.

எனினும், சுப்ரீம் கோர்ட்டில் இன்று பட்டியலிடப்பட்ட வழக்கு விசாரணையில் கெஜ்ரிவாலின் மனு இடம் பெறவில்லை என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தீவிர பணிகளில் ஈடுபட்டு வரும் சூழலில், எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள, ஆம் ஆத்மியை சேர்ந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது அரசியலில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.


Next Story