'ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி, பலம் பெற பா.ஜ.க. விரும்புகிறது' - பிரியங்கா காந்தி
ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி, பா.ஜ.க. பலம் பெற விரும்புகிறது என பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றுவதாக கூறுகிறார்கள். இது உங்கள் உரிமைகளை பலவீனப்படுத்திவிடும். ஏனென்றால் இந்த அரசியலமைப்பு சட்டம்தான் உங்களுக்கு வாக்குரிமை, கல்வியுரிமை, இடஒதுக்கீடு, பேச்சு சுதந்திரம் மற்றும் போராடுவதற்கான உரிமைகளை வழங்கியது. இதுதான் ஜனநாயகம்.
இந்த ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி, பா.ஜ.க. பலம் பெற விரும்புகிறது. அவர்களுக்கு தேவை அதிகாரம் மட்டும்தான். இந்தியாவின் அனைத்து சொத்துக்களையும் தங்கள் தொழிலதிபர் நண்பர்களுக்கு பா.ஜ.க.வினர் விற்றுவிட்டனர். தங்கள் தொழிலதிபர் நண்பர்கள் மட்டும் முன்னேறினால் அவர்களுக்கு போதுமானது.
வெறும் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பா.ஜ.க., உலகின் பணக்கார கட்சியாக மாறிவிட்டது. ஆனால் 55 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் அவ்வாறு மாறிவிடவில்லை. அனைத்து இடங்களிலும் நன்கொடை வசூலிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.வின் கொள்கை."
இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.