அமேதி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா போட்டியா..? காங்கிரஸ் நிலைப்பாடு என்ன..?


அமேதி, ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி, பிரியங்கா போட்டியா..? காங்கிரஸ் நிலைப்பாடு என்ன..?
x
தினத்தந்தி 8 April 2024 10:49 PM GMT (Updated: 9 April 2024 12:20 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி, ரேபரேலி மக்களவை தொகுதிகள், சோனியாகாந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து ரேபரேலி தொகுதியின் எம்.பி.யாக சோனியாகாந்தி இருந்து வந்தார். தற்போது, மாநிலங்களவை எம்.பி.யாக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 2004-ம் ஆண்டில் இருந்து அமேதி தொகுதி எம்.பி.யாக ராகுல்காந்தி இருந்தார். 2019-ம் ஆண்டு தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார்.

தற்போதைய தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் மீண்டும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணியில் அமேதி, ரேபரேலி தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

அமேதியில் ராகுல்காந்தியும், ரேபரேலியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவும் போட்டியிட வேண்டும் என்று உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வற்புறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச காங்கிரசுக்கான மேலிட பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "அமேதியும், ரேபரேலியும் காங்கிரசுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாட்டுக்கும் முக்கியமான தொகுதிகள். பொதுமக்கள் மற்றும் கட்சியினரின் உணர்வுகளை தேசிய தலைமையிடம் எடுத்துக்கூறியுள்ளோம். அரசியலில் வியூகம் பின்பற்றப்படுகிறது. அந்த வியூகப்படி, உரிய நேரத்தில் 2 தொகுதிகளின் வேட்பாளர்கள் பெயர்களையும் கட்சியின் தேர்தல் குழு அறிவிக்கும்" என்று அவினாஷ் பாண்டே கூறினார்.


Next Story