முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரியில் இன்று பிரசாரம்


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரியில் இன்று பிரசாரம்
x
தினத்தந்தி 25 March 2024 5:55 AM IST (Updated: 25 March 2024 7:09 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாங்குநேரியில் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் இந்தியா கூட்டணியான தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கொ.ம.தே.க. உள்ளிட்ட கட்சிகள் ஒரு அணியாகவும், அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்டவை மற்றொரு அணியாகவும், பா.ஜனதா, பா.ம.க., த.மா.கா, அ.ம.மு.க., புதிய நீதிக்கட்சி உள்ளிட்டவை இன்னொரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கிறது.

இதில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து அவர்களை ஆதரித்து தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி நெல்லை, கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் இன்று மதியம் வருகிறார். பின்னர் அவர் அங்குள்ள ரிசார்ட்டில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு நாங்குநேரியில் அறிமுக கூட்டம் நடக்கும் பிரசார மேடைக்கு வருகிறார். அங்கு வேட்பாளர்களை அறிமுகம் செய்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.

பிரசாரத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு மீண்டும் தூத்துக்குடியில் உள்ள ரிசார்ட்டில் இரவில் தங்குகிறார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


Next Story