நாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார்: உமர் அப்துல்லா அறிவிப்பு


நாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார்: உமர் அப்துல்லா அறிவிப்பு
x
தினத்தந்தி 3 April 2024 9:54 AM GMT (Updated: 3 April 2024 10:00 AM GMT)

நாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார் என்று உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இந்தியா என்ற பெயரில் கூட்டணி அமைத்து உள்ளன.

இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மேற்கு வங்காளத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தன. இந்த அதிர்ச்சி மறைவதற்குள், பீகார் முதல்-மந்திரியும், இந்தியா கூட்டணியை உருவாக்கியவர்களில் முக்கிய தலைவருமான நிதிஷ்குமார் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தார்.

இதையடுத்து ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார். இது இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், உடல்நிலை காரணமாக நாடாளுமன்ற தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிடமாட்டார் என்று அவரது மகனும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறுகையில், "உடல்நிலை காரணமாக பரூக் அப்துல்லா இம்முறை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கட்சியின் பொதுச்செயலாளர் அலி முகமது சாகர், கட்சி உறுப்பினர்களிடம் அறிவுறுத்தினேன். அதன்படி பரூக் அப்துல்லா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார். டெல்லியில் மக்களின் குரலாகத் திகழும் சிறந்த வேட்பாளரை இத்தொகுதியில் நிறுத்துவது கட்சியின் பொறுப்பாகும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story