நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு


நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு
x

நாடு முழுவதும் 102 தொகுதிகளில் நேற்று நடந்த நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

புதுடெல்லி,

இந்திய ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகின் மாபெரும் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்த பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 16-ந்தேதி வெளியானது..

ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் பிரதான அணிகளாக களத்தில் உள்ளன. இதுதவிர பல்வேறு மாநில கட்சிகள் தனியாகவும், கூட்டணியாகவும் களம் காண்கின்றன.

21 மாநிலங்களில் நேற்று முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்தவகையில் தமிழ்நாடு (39 தொகுதிகள்), உத்தரகாண்ட் (5), அருணாசல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான்-நிகோபார் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), ராஜஸ்தான் (12), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), மராட்டியம் (5), பீகார் (4), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), காஷ்மீர் (1), சத்தீஷ்கார் (1) என 102 தொகுதிகளில் இந்த தேர்தல் நடந்தது. 7 கட்டமாக நடைபெறும் தேர்தலில், முதல் கட்ட தேர்தலில்தான் அதிக தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

16.63 கோடிக்கு அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இதில் 35.67 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆவர். முதற்கட்ட தேர்தலுக்காக இந்த மாநிலங்களில் 1.87 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த வாக்குச்சாவடிகளில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதற்கு முன்னதாகவே பல வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. வாக்குப்பதிவு தொடங்கியதும் அவர்கள் காத்திருந்து வாக்களித்தனர்.

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டுவதால், காலையிலேயே அதிக அளவிலான வாக்காளர்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். பின்னர் நண்பகல் மற்றும் மதிய நேரத்தில் பல இடங்களில் மந்தமான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலையில் மீண்டும் வேகமெடுத்தது.

முதல் முறை வாக்காளர்கள், திருமணம் முடிந்து மாலையும் கழுத்துமாக வந்து வாக்களித்தவர்கள், கைக்குழந்தையுடன் வந்து வாக்களித்தவர்கள், மாற்றுத்திறனாளிகள், சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்ட முதியவர்கள் என பல தரப்பட்டவர்களும் உற்சாகமாக வந்து வாக்களித்தனர். முதல் முறை வாக்காளர்கள் பலரும் வாக்களித்ததும் மை வைக்கப்பட்ட விரல்களுடன் செல்பி புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் அப்போதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

அதேநேரம் வடகிழக்கு பகுதிகள் உள்ளிட்ட சில மாநிலங்களில் மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது. இந்த முதற்கட்ட தேர்தலில் கடைசியாக கிடைத்த தகவலின்படி 64 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதில் அதிகபட்சமாக திரிபுராவில் 79.90 சதவீதம் மற்றும் மேற்கு வங்காளத்தில் 77.57 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மாலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 7 கட்ட தேர்தலும் நிறைவடைந்த பிறகு ஜூன் 4-ந்தேதி இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நாடாளுமன்ற முதற்கட்ட தேர்தல் பெரும்பாலும் அமைதியாக நடந்து முடிந்தது. எனினும் சில இடங்களில் லேசான வன்முறை சம்பவங்களும், சலசலப்புகளும் ஏற்பட்டன். அந்தவகையில் சத்தீஷ்காரில் பீரங்கி குண்டு தவறுதலாக வெடித்ததில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

மேற்கு வங்காளத்தின் கூச்பெகர் தொகுதியில் பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்களுக்கு இடையே வன்முறை வெடித்தது. இதில் பலர் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய 18 லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு இருந்தனர். மேலும் அமைதியான வாக்குப்பதிவுக்காக இந்த தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அந்தந்த மாநில போலீசாருடன் இணைந்து, துணை ராணுவமும் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தனர்.


Next Story