கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உலக மகா 'வாஷிங் மிஷின்' தான் தேர்தல் பத்திரம் - கமல்ஹாசன் பேச்சு


கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றும் உலக மகா வாஷிங் மிஷின் தான் தேர்தல் பத்திரம் - கமல்ஹாசன் பேச்சு
x

100 கோடி ரூபாய் வருமானம் உள்ள கம்பெனிகள் எப்படி 200 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ஓட்டேரியில், வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தில் கமல்ஹாசன் பேசியதாவது:-

தமிழர்களுக்கு செங்கோல் என்றால் ஒரு மரியாதை உண்டுதான். ஆனால் அந்த செங்கோல் யார் கையில் இருக்கிறது என்பதை பார்ப்பார்கள். இது மக்களாட்சி என்பதால் அது மக்கள் கையில்தான் இருக்க வேண்டும். மன்னர் கையில் இருக்கக்கூடாது. 2050-ம் ஆண்டு எட்ட வேண்டிய இலக்கை தமிழகம் இப்போது எட்டி விட்டது. இத்தனைக்கும் நாம் கொடுக்கும் ஒரு ரூபாயில் 29 காசு திருப்பி கொடுப்பதில் இந்த வளர்ச்சி. ஒரு ரூபாயை கொடுத்தால் என்ன நடக்கும் என்று பாருங்கள்.

உலக மகா ஊழல் என்று வெளிநாட்டில் இருப்பவர்கள் கவனித்து தெரிவித்துள்ளனர். அதுதான் தேர்தல் பத்திர ஊழலாகும். அதுவும், 100 கோடி ரூபாய் வருமானம் உள்ள கம்பெனிகள் எப்படி 200 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் உலக மகா வாஷிங் மெஷினாக தேர்தல் பத்திரத்தை கண்டுபிடித்துள்ளார்கள். நமக்கு அது தேவையில்லை நாம் நமது வியர்வையில் நனைத்தாலே நமது பணம் வெள்ளையாக மாறிவிடும்.

எனக்கு திரைக்கதை எழுத தெரியும் என்பதால் அவர்கள் எந்த பாதையில் செல்வார்கள் என்று எனக்கு தெரியும். முதலில், தலைநகரை நாக்பூராக மாற்றுவார்கள். வேறு வேறு மதங்கள் எதற்கு எல்லாமே ஒரே மதமாக இருந்தால் என்ன என்பார்கள். இந்தியை ஆட்சி மொழியாகவும், அனைவரும் அதைத் தான் பேச வேண்டும் என்றும் சொல்லப் போகிறார்கள். நாம் படிக்கும் பாடத்திட்டங்களில் வரலாறுகள் இருக்காது புராணங்கள் தான் இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story