நடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- தென் சென்னை


நடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- தென் சென்னை
x
தினத்தந்தி 29 March 2024 2:04 PM IST (Updated: 29 March 2024 3:25 PM IST)
t-max-icont-min-icon

பேரறிஞர் அண்ணாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது என தென் சென்னை தொகுதியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

தென் சென்னை

தமிழ்நாட்டின் 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 3-வது தொகுதியாக இருப்பது, தென் சென்னை. சென்னையில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி, அசூர வளர்ச்சி கொண்ட வேளச்சேரி, தியாகராயநகர், சோழிங்க நல்லூர், விருகம்பாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது, பேரறிஞர் அண்ணாவை நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது என தென் சென்னை தொகுதியை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். அது மட்டுமல்லாமல், உயர்தட்டு மக்கள், படித்தவர்கள். வெளிமாநில வாக்காளர்கள் என கலவை தொகுதியாகவும் இது இருக்கிறது.

போக்குவரத்து நெரிசல்

மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பிரபலமான கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றை இந்த தொகுதி கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வானுயர்ந்த அடுக்குமாடி கட்டிடங்கள் அதிகம் நிறைந்த தொகுதியாகவும் இருக்கின்றன. மேலும் ஆடை, ஆபரணங்களுக்கு பெயர் போன தியாகராயநகர், ஆசியாவிலேயே 2-வது பெரிய மார்க்கெட் என்ற பெருமைக்குரிய கோயம்பேடு மார்க்கெட், திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் ஆகியவையும் இதே தொகுதியில்தான் உள்ளன.

இப்படிப்பட்டதொகுதியான தென்சென்னையில் நிறை வேற்றப்பட வேண்டிய திட்டங்களும், தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன.அந்த வகையில் திருவான்மியூர். கிழக்கு கடற்கரை சாலை, ஓ.எம்.ஆர். சாலை பகுதிகளில் இன்றளவும் தீர்கப்படாத போக்குவரத்து நெரிசல், சுகாதார சீர்கேட்டின் அடையாளமாக இருக்கக்கூடிய பெருங்குடி குப்பை மேட்டுக்கு மாற்று தீர்வு என்பது அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் நிறை வேற்றப்படாத பிரச்சினையாக உள்ளது.

தென் சென்னை தொகுதியில் தியாகராயநகர், திருவல்லிக் கேணி, மயிலாப்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், தாம்பரம் என 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்று இருந்த நிலையில், 2008-ம் ஆண்டு செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராயநகர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்று உள்ளன.

1957-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ஒரு இடைத்தேர்தல் உள்பட 16 நாடாளுமன்ற தேர்தல்களை தென் சென்னை தொகுதி சந்தித்து இருக்கிறது. இந்த தொகுதியில் கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது, தி.மு.க. 9 முறையும், காங்கிரஸ் 5 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் வெற்றியை பதிவு செய்து இருக்கின்றன.

தென் சென்னை தொகுதியில் 1957-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றதேர்தலில் காங்கிரஸ் சார்பில் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் களம் இறங்கி முதல் வெற்றியை பதிவு செய்தார். இவர்தான் மத்திய அரசின் முதல் நிதி மந்திரி ஆவார். அதனைத்தொடர்ந்து 1962-ம் ஆண்டு காங்கிரஸ் வசம் இருந்த இந்த தொகுதியை தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நாஞ்சில் கே.மனோகரன் தட்டிப்பறித்தார். 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை வெற்றி வாகை சூடினார். அப்போது அவர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.குருமூர்த்தியை தோற்கடித்து, முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கால் பதித்தார்.

காங்கிரஸ் 4 முறை

அதன் பின்னர், 1967-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல், 1971-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முரசொலிமாறன் (தி.மு.க.) வெற்றிபெற்றார். ஆனால் 1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முரசொலிமாறன் தோல்வியை சந்தித்தார், அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார். 1980-ம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் 2-வது முறையாக அவரே வெற்றியை பதிவுசெய்தார்.

அப்போது அ.தி.மு.க.சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1984, 1989-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் வைஜெயந்தி மாலா வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் ஆலடி அருணா தோற்றுப்போனார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 4 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றது.

திமுக வெற்றி

1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. தனது முதல் வெற்றியை இந்த தொகுதியில் பதிவு செய்தது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஸ்ரீதரன், தி.மு.க. வேட்பாளர் டி.ஆர். பாலுவை தோற்கடித்தார். அதனையடுத்து, 1996, 1998, 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் தொடர்ந்து 4 முறை தி.மு.க. வேட்பாளர் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றார்.

தி.மு.க.ளின் இந்த தொடர் வெற்றிக்கு 2009-ம் ஆண்டு தேர்தலில் அதிமு.க. முற்றுப்புள்ளி வைத்தது. அ.தி.மு.க. சார்பில் களம் இறங்கிய சிட்லபாக்கம் ராஜேந்திரன், தி.மு.க. வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதியை தோற்கடித்தார். 2014-ம் ஆண்டு தேர்தலிலும் அ.தி.மு.க. மீண்டும் வெற்றியை தக்க வைத்தது. அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட டாக்டர் ஜெ.ஜெயவர்தன் வெற்றி பெற்றார். 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றிக் கொடியை ஏற்றியது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் 2,62,223 வாக்குகள் வித்தியாசத்தில், அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை தோற்கடித்தார்.

வாக்காளர்கள் எவ்வளவு?

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் 20 லட்சத்து 7 ஆயிரத்து 816 வாக்காளர்கள் இருக்கின்றனர். அதில் ஆண் வாக்காளர்கள் 9 லட்சத்து 93 ஆயிரத்து 590, பெண் வாக்காளர்கள்10 லட்சத்து 13 ஆயிரத்து 772, மூன்றாம் பாலினத்தவர்கள் 454.

சட்டமன்ற தொகுதிகள் வாரியாக வாக்காளர்களின் எண்ணிக்கைவிவரம் வருமாறு:-

விருகம்பாக்கம்.-2,78,078

சைதாப்பேட்டை-2.68,355

தியாகராயநகர்-2,30,049

மயிலாப்பூர்-2,62,543

சோழிங்கநல்லூர், 6,60,419

வேளச்சேரி-3,08,462

சோழிங்கநல்லூர்-2,62,453

2019-ம் ஆண்டு தேர்தல் முடிவு எப்படி?

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் முதல் 5 இடங்களைபிடித்தவர்கள் விவரம் வருமாறு:-

தமிழச்சி தங்கபாண்டியன் (தி.மு.க.)- 5,64,872

டாக்டர் ஜெ.ஜெயவர்தன் (அ.தி.மு.க.).-3,02,619

ஆர்.ரங்கராஜன் (மக்கள் நீதி மய்யம்)-1,35,465

அ.ஜெ.ஷெரின் (நாம் தமிழர்)-50,222

இசக்கி சுப்பையா (அ.ம.மு.க.)-29.522

வெற்றி யார் கையில்?

தென் சென்னை நொகுதியில் கடந்த 2009, 2014-ம் ஆண்டு தேர்தல்களில் தொடர் வெற்றியை பிடித்த அ.தி.மு.க.விடம் இருந்து, கடந்த தேர்தலில் வெற்றியை தி.மு.க. தட்டிபறித்தது. அதுமட்டுமல்லாமல், 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,தியாகராயநகர், மயிலாப்பூர், வேளச்சேரி,சோழிங்கநல்லூர் ஆகியவை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி கைப்பற்றியது. இவ்வாறான அசூர பலத்துடன், தற்போதையநாடாளுமன்ற தேர்தலில் தென் சென்னை தொகுதியில் தி.மு.க. சார்பில் கடந்த முறை வெற்றி கண்ட தமிழச்சி தங்கபாண்டியன் களம் இறங்குகிறார். அ.தி.மு.க. தரப்பில் கடந்தமுறை தோல்வியை தழுவிய டாக்டர் ஜெயவர்தன் மீண்டும் போட்டியிடுகிறார். இது தவிர பா.ஜனதா வேட்பாளராக கவர்னர் பதவியில்இருந்து விலகி மீண்டும் பா.ஜனதா உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்ட டாக்டர் தமிழிசை களத்தில் குதித்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக தமிழ்ச்செல்வி போட்டியிட உள்ளார்.

அந்தவகையில் தென்சென்னை நட்சத்திரதொகுதியாக பார்க்கப்படுகிறது. கடந்த முறை வெற்றியை பறிகொடுத்த அ.தி.மு.க. இந்தமுறை தென்சென்னை தொகுதியை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் தீவிரம் காட்டத்தொடங்கியுள்ளது. பா.ஜனதாவும். நாம் தமிழர் கட்சியும் வெற்றியை பதிவுசெய்யும் நோக்கில் முழு மூச்சில் இறங்க இருக்கிறது. வேட்பாளர்களில் தமிழச்சி தங்கபாண்டியன் கவிஞர், எழுத்தாளர் மற்றும் பேராசிரியரும் ஆவார். ஜெயவர்தனும், தமிழிசை சவுந்தரராஜனும் டாக்டர்கள். தமிழ்ச்செல்வி பேராசிரியர்.

படித்தவர்களே அதிகம்

தென் சென்னையை பொறுத்தவரையில், படித்தவர்கள் அதிகம் உள்ள நாடாளுமன்ற தொகுதியாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் வேட்பாளர்களாக களம் இறங்கும் இந்த 4 பேரும் நன்கு படித்தவர்கள். எனவே தென் சென்னையில் 4 முனைப்போட்டி பலமாக இருக்கும். இதுதவிர, 2019-ம் ஆண்டு தேர்தலின்போது தென் சென்னைதொகுதியில் 19,36,209 வாக்காளர்கள் இருந்தனர். அடுத்த 5ஆண்டுகளில் 34ஆயிரத்து 301 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இந்த புதிய வாக்காளர்களின் ஓட்டும் வெற்றியை நிர்ணயிக்கும் துருப்புச்சிட்டாக இருக்கும். போட்டிபலமாக இருக்கும் நிலையில், தி.மு.க.வுக்கே மீண்டும் வெற்றி கிட்ட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டாலும், அந்த வெற்றி கையருகில் இல்லை.

அந்த வெற்றியை தீர்மானிக்கும் சக்தி மக்களிடமே உள்ளது. தென்சென்னை தொகுதி எம்.பி.யின் 5 ஆண்டு கால செயல்பாடு குறித்து மக்களிடம் கேட்டபோது, 'வாக்குறுதிகளில் 60 சதவீதம் வரை நிறைவேற்றி இருப்பதாகவும், மக்கள் பிரச்சினைகளுக்கு நேரில் வந்து பதில் அளிக்கும் வகையில் அவர் நடவடிக்கை இருப்பதாகவும், சில கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமல் போவதாகவும் தெரிவித்தனர்.

இதுதவிர திடக்கழிவு மேலாண்மை சரியாக கையாளாதது, விரிவாக்கட்டட்ட பகுதிகளில் குடிநீர், கழிவுநீர் இணைப்புகள் வழங்குவதில் தற்போது வரை பிரச்சினை இருந்து வருவது என பிரச்சினைகள், தீர்வுகள் நீண்டுகொண்டே போகின்றன. அதிலும் புயல்,மழைகாலங்களில் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகள் இந்த தென் சென்ளை தொகுதிக்குட்பட்ட பகுதியில்தான் இருக்கிறது. அதற்கு மாற்று ஏற்பாடு என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

தீர்க்கப்படாத பிரச்சினைகள், நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் இருந்தாலும், கொட்டிவாக்கத்தில் மீன் அங்காடி,தொகுதி முழுவதும் பஸ் நிறுத்தங்கள், அடிப்படை கட்டமைப்புவசதிகள், மேம்பாடு, பள்ளிக்கரணை சதுப்புநில மீட்பு நடவடிக்கை,மாதிரி கிராமம் உருவாக்கியது என கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், சேவைகள், வசதிகள் போன்றவற்றால் தொகுதி மக்களிடம் நன்மதிப்பையும் பெற்றிருக்கிறது. தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் கொண்ட தென் சென்னை தொகுதியின் வளர்ச்சிக்கு மேலும் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.


Next Story